சத்தமில்லாமல் சச்சின் சாதனையை முறியடித்த சுப்மன் கில்!
நேற்றைய ஐபிஎல் போட்டியானது நரேந்திர மோடி மைதானத்தில் வைத்து, குஜராத் அணிக்கும், ஹைதராபாத் அணிக்கும் இடையே நடைபெற்றது.
இப்போட்டியில் இளம் வீரரான சுப்மன் கில் தனது அதிரடி ஆட்டத்தின் மூலம் 58 பந்துகளில் 101 ரன்களை எடுத்து இந்த ஐபிஎல்-லில் 6வது நபராக 100 ரன்களைக் கடந்த வீரர் என்ற சாதனையைப் படைத்தார்.
நேற்றைய போட்டியின் மூலம் சுப்மன் கில் சத்தமில்லாமல் சச்சினின் ஒரு சாதனையையும் முறியடித்துள்ளார்.
அதாவது, குஜராத் டைட்டன்ஸ் அணிக்காக பேட்டிங் செய்த 23 வயதான சுப்மன் கில் 22 பந்துகளை சந்தித்து அதில் அதிவேக அரை சதத்தை அடித்தார். இந்த அரை சதத்தில் 9 பவுண்டரிகள் அடங்கிய நிலையில், ஒரு சிக்சர் கூட அடிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

அந்தவகையில், இதற்கு முன்னதாக சச்சின் டெண்டுல்கர், 2010ல் டெல்லி டேர்டெவில்ஸ் அணிக்கு எதிராக, ஒரு சிக்ஸர்கூட அடிக்காமல், 23 பந்துகளில் அதிவேக அரைசதம் அடித்ததே, தனித்துவமான சாதனையாக கருதப்பட்ட நிலையில், அதை தற்போது ஒரு சிக்ஸர் கூட அடிக்காமல் 22 பந்துகளில் அதிவேக அரைசதம் அடித்து சுப்மன் கில் முறியடித்துள்ளார்.
அதுமட்டுமல்லாமல், இந்த ஐபிஎல்-லில், குஜராத் அணிக்கான விளையாடி வரும் சுப்மன் கில், ஐபிஎல் சீசனில் 500 ரன்களைக் கடந்ததும் இதுவே முதல்முறையாகும். முன்னதாக சுப்மன் கில், ஐபிஎல் 2020ல் 440 ரன்களும், ஐபிஎல் 2021ல் 478 ரன்களும், ஐபிஎல் 2022ல் 483 ரன்களும் எடுத்துள்ளார்.
அதுமட்டுமல்லாமல், குஜராத் டைட்டன்ஸ் அணிக்காக 1,000 ரன்களை எடுத்த முதல் வீரர் என்ற பெருமையையும் கில் பெற்றுள்ளார்.