அதிக ரன் எடுத்தவர் பட்டியலில் மோதும் சுப்மன் கில், டேவன் கான்வே! இப்போ என்ன நிலவரம் தெரியுமா?
ஐபிஎல் 2023ம் ஆண்டு 16வது சீசன் போட்டிகள் இறுதிக்கட்டத்தை நோக்கி நகர்ந்து வருகிறது. இந்நிலையில், நேற்று பிளே ஆஃப் சுற்றின் முதல் குவாலிஃபயர் போட்டி நடைபெற்றது.
இதில் சென்னை அணியும், பலம்வாய்ந்த குஜராத் அணியும் மோதிய நிலையில், சென்னை அணி 15 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது.
இந்நிலையில், இன்று மற்றொரு போட்டியில் லக்னோ அணியும், மும்பை அணியும் மோதுகின்றன. இதில் வெற்றிபெறும் அணியுடன், நேற்று தோல்வியுற்ற குஜராத் அணி, 2வது குவாலிஃபயர் போட்டியில் மே 26ம் தேதி மோதுகிறது. இதில் வெற்றிபெறும் அணி இறுதிப்போட்டியில் சென்னை அணியுடன் மோதும்.
இந்நிலையில், தற்போதுவரை இந்த சீசனில் அதிக ரன்கள் எடுத்தவர்கள் வரிசையில், ஆரஞ்சு கேப் பட்டியலில் ஃபாப் டூ ப்ளஸிஸ் 730 ரன்களுடன் முதலிடத்தில் இருக்கிறார். சுப்மன் கில் 722 ரன்களுடன் 2வது இடத்திலும், விராட் கோலி 649 ரன்களுடன் 3வது இடத்திலும், டேவன் கான்வே 625 ரன்களுடன் 4வது இடத்திலும் உள்ளனர்.
இதில், பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றில் இடம் பெறாததால், டூ ப்ளஸிஸ் மற்றும் கோலி இருவருக்கும் இனி ரன்கள் எடுக்க வாய்ப்பில்லை. இதில் குஜராத் அணியைச் சேர்ந்த சுப்மன் கில் மே 26ம் தேதி நடக்கும் போட்டி, ஒருவேளை அதில் வெற்றி பெற்றால் இறுதிப் போட்டி வாய்ப்பு சேர்த்து 2 போட்டிகளில் விளையாட அவருக்கு வாய்ப்பு உள்ளது. அதே சமயம் சென்னை அணியின் டேவன் கான்வேவுக்கு இறுதிப் போட்டி வாய்ப்பு மட்டுமே உள்ளது.
இப்போது முதலிடத்தைப் பிடிக்க, சுப்மன் கில் வெறும் 9 ரன்களை அடித்தாலே அவர் ஆரஞ்சு கேப் பட்டியலில் முதலிடத்தைப் பெற்றுவிடுவார். ஆனால் டேவன் கான்வே 106 ரன்கள் எடுத்தால் மட்டுமே ஆரஞ்சு கேப் பட்டியலில் முதலிடத்தைப் பெறமுடியும். ஒருவேளை இந்த இரண்டும் நடக்காமல், ஃபாப் டூ ப்ளஸிஸ் ஆரஞ்சு கேப் பட்டியலில் முதலிடத்தில் கடைசிவரை நீடிக்கவும் வாய்ப்புள்ளது.
இருந்தாலும், காலம்தான் இதற்கு பதில் சொல்லும். பொறுத்திருந்து பார்ப்போம்.