நேற்றைய ஐபிஎல் போட்டி குஜராத் அணிக்கும், ஹைதராபாத் அணிக்குமிடையே நடைபெற்ற நிலையில், சுப்மன் கில் அதிரடி ஆட்டத்தாலும், ஷமி மற்றும் ஷர்மாவின் அபார பந்துவீச்சாலும் குஜராத் அணி தனது 9வது வெற்றியை ருசித்தது.
ஐபிஎல் போட்டி 16வது சீசன் தொடரின் 62வது போட்டியில் குஜராத் அணியும், ஹைதராபாத் அணியும் மோதியது. இதில் டாஸை வென்ற ஹைதராபாத் அணி பவுலிங்கை தேர்வு செய்தது. இதையடுத்து குஜராத் அணியின் துவக்க ஆட்டக்காரர்கள் விரிதிமன் சாஹா மற்றும் சுப்மன் கில் இருவரும் களமிறங்கினர்.
இதையடுத்து முதல் ஓவரை புவனேஷ்வர் குமார் வீச, 3வது பந்தில் சாஹா ரன் எதுவும் எடுக்காமல் ஆட்டமிழந்தார். பின்னர் சாய் சுதர்ஸன் கில்லுடன் ஜோடி சேர்ந்தார். பின்னர் இருவரும் தங்கள் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி எதிரணி பந்துவீச்சாளர்களை திணறடித்தனர்.
இரண்டாவது விக்கெட் விழாதவாறு இருவரும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய நிலையில் 14.1 ஓவரில் சாய் சுதர்ஸன் 36 பந்துகளில் 47 ரன்களை எடுத்து அவுட்டானார்.
ஒருபக்கம் சுப்மன் கில் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்த, மறுமுனையில் களமிறங்கிய வீரர்கள் சொற்ப ரன்களிலும், ரன் எதுவும் எடுக்காமலும் ஆட்டமிழந்தனர்.
இப்போட்டியில் சுப்மன் கில் அதிரடி ஆட்டத்தின் மூலம் 58 பந்துகளில் 101 ரன்களைக் குவித்த நிலையில், குஜராத் அணி 20 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு 188 ரன்களைக் குவித்தது.
இதையடுத்து 189 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஹைதராபாத் அணி களமிறங்கியது.
அந்த அணியின் துவக்க வீரர்கள் அனைவரும் எதிர்பார்த்த அளவு சிறப்பான துவக்கத்தை அளிக்காத நிலையில், 4வது விக்கெட்டுக்கு களமிறங்கிய ஹென்ரிச் க்ளாஸன் மட்டும் 44 பந்துகளில் 64 ரன்களை எடுத்து ஓரளவுக்கு அணியின் ஸ்கோரை உயர்த்தினார்.
இருந்தாலும், முஹம்மது ஷமி, மொகித் ஷர்மா இருவரும் அபாரமாக பந்துவீசி, தலா 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.
இதையடுத்து ஹைதராபாத் அணி 20 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு 154 ரன்களை மட்டுமே குவித்ததைத் தொடர்ந்து, குஜராத் அணி 34 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.