முறியடிக்க முடியாத இத்தனை சாதனைகளா! சச்சினின் 50 Not Out!
கிரிக்கெட் உலகின் ஜாம்பவான் சச்சின் இன்று தனது 50 வயதை எட்டியுள்ளார். அவருக்கு கிரிக்கெட் வீரர்கள், பிரபலங்கள், ரசிகர்கள் என அனைவரும் வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.
கிரிக்கெட் உலகில் டான் பிராட்மேனுக்கு அடுத்தபடியாக, உலகளவில் கிரிக்கெட் ரசிகர்களால் இன்றுவரை கொண்டாடப்படும் ஒரு வீரர் என்றால் அது சச்சின் டெண்டுலகர்தான். எண்ணிலடங்கா சாதனைகளை தன் வசம் வைத்திருக்கக்கூடியவர்.
அவரது சாதனைகளில் சில, மற்ற வீரர்களால் முறியடிக்கப்படலாம். இருந்தாலும், வேறு பல சாதனைகள் முறியடிக்கப்படுமா? என்பதும் சந்தேகமே...
இந்த பிறந்தநாளில் அவரது ஒரு சில மகத்தான சாதனைகளை இங்கே பார்க்கலாம்.
1) டெஸ்ட் போட்டிகளில், 200 போட்டிகளில் விளையாடி, 51 சதங்கள் அடித்ததன் மூலம், டெஸ்ட் போட்டியில் அதிக சதங்கள் அடித்தவர்கள் இடத்தில், முதலிடத்தில் இருக்கிறார்.
2) டெஸ்ட் போட்டிகளில் அதிக பவுண்டரிகளை விளாசியவர்கள் பட்டியலில், 2058+ பவுண்டரிகளை விளாசி முதலிடத்தில் இருக்கிறார்.

3) ஒருநாள் போட்டியில், ஒரு வருடத்தில் அதிக சதங்கள் அடித்த வீரர்கள் பட்டியலில் 1998ம் வருடம் அவர் 9 சதங்களை அடித்ததன் மூலம் முதலிடத்தில் இருக்கிறார்.
4) ஒரு நாள் போட்டிகளில், அதிக அரை சதங்களை அடித்தவர்கள் பட்டியலில், 145 அரைசதங்களை அடித்து முதலிடம் வகித்து வருகிறார்.
5) டெஸ்ட் போட்டிகளில், 200 போட்டிகளில் விளையாடி, அதிக ரன்கள் அடித்தவர்கள் பட்டியலில் 15,921 ரன்கள் அடித்து முதலிடத்தில் இருந்து வருகிறார்.
6) ஒருநாள் போட்டிகளில் அதிக ரன்கள் அடித்தவர்கள் பட்டியலில் 463 மேட்சுகளில், 18,426 ரன்கள் அடித்து முதலிடத்தில் இருந்து வருகிறார்.
7) ஒருநாள் போட்டிகளில் அதிக பவுண்டரிகளை விளாசியவர்கள் பட்டியலில், 2016 பவுண்டரிகளை விளாசி முதலிடம் வகித்து வருகிறார்.
8) ஒரு அணிக்கு எதிராக அதிக சதங்கள் அடித்தவர்கள் பட்டியலில், ஆஸ்திரேலியாவுக்கெதிராக 20 சதங்கள் அடித்து முதலிடத்தில் இருக்கிறார்.
9) டெஸ்ட், ஒரு நாள், டி20 என எல்லா போட்டிகளிலும் சேர்த்து அதிக அரை சதங்கள் அடித்தவர்கள் பட்டியலில் 264 அரை சதங்கள் அடித்து முதலிடம் பிடித்து வருகிறார்.
10) டெஸ்ட், ஒரு நாள், டி20 என எல்லா போட்டிகளிலும் சேர்த்து அதிக பவுண்டரிகள் அடித்தவர்கள் பட்டியலில் 4076+ பவுண்டரிகள் அடித்து முதலிடத்தில் இருக்கிறார்.

11) ஒருநாள் போட்டியில், ஒரு வருடத்தில் அதிக ரன்கள் அடித்த வீரர்கள் பட்டியலில், 1998ம் வருடம் 1894 ரன்களை அடித்தன் மூலம் இன்று வரை முதலிடத்தை தக்கவைத்து வருகிறார்.
12) டெஸ்ட், ஒரு நாள், டி20 என எல்லா போட்டிகளிலும் சேர்த்து அதிக ரன்கள் அடித்தவர்கள் பட்டியலில், 664 மேட்சுகளில் விளையாடி, 34,357 ரன்கள் அடித்து, இன்றுவரை முதலிடத்தில் இருக்கிறார்.
13) அதிக டெஸ்ட் மேட்சுகளை விளையாடிய வீரர் என்ற வரிசையில் 200 மேட்சுகளில் விளையாடி முதலிடத்தில் இருக்கிறார்.
14) இதுவரை ஒருநாள் போட்டிகளில், 463 போட்டிகளை விளையாடிய சச்சின், 22 வருடம் 91 நாட்கள் பயணித்து, ஒருநாள் போட்டிகளில் நீண்டகாலம் பயணித்த வீரர் என்ற வரிசையில் முதலிடத்தில் இருக்கிறார்.

இதுமட்டுமல்ல, இன்னும் சொல்லிக்கொண்டே போகலாம்... அந்தளவுக்கு கிரிக்கெட்டில் தனது அழுத்தமான காலடியை பதித்து பல சாதனைகளை படைத்து, அதை பல ஆண்டுகாலமாக தன் கைக்குள்ளேயே வைத்து வருபவர்தான் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர்.
இவரது 50வது பிறந்தநாளான இன்று பிரபலங்கள், கிரிக்கெட் வீரர்கள், பிரபலங்கள், ரசிகர்கள் என அனைவரும் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருவதோடு, அவரது சாதனைகளையும் கொண்டாடி வருகின்றனர்.
இந்நிலையில், தனது பிறந்தநாளில் சச்சின் தனது ட்விட்டர் பக்கத்தில், 'Tea time: 50 Not Out!' என்று பதிவிட்டு, பகிர்ந்துள்ள புகைப்படமும், ரசிகர்களிடையே வைரலாகி வருகிறது.