இலங்கையா? இந்தியாவா? இறுதிப்போட்டியில் நுழையும் வாய்ப்பை முடிவு செய்யும் இரண்டு டெஸ்ட் போட்டிகளின் கடைசி நாள் விறுவிறுப்பான ஆட்டம் இன்று!

இலங்கையா? இந்தியாவா? இறுதிப்போட்டியில் நுழையும் வாய்ப்பை முடிவு செய்யும் இரண்டு டெஸ்ட் போட்டிகளின் கடைசி நாள் விறுவிறுப்பான ஆட்டம் இன்று!

ஒரே நாளில் டெஸ்ட் போட்டிகள் வெவ்வேறு அணிகளுக்கு இடையே நடப்பது சகஜம்தான். ஆனால் இன்று நடக்கும் டெஸ்ட் போட்டியானது இரு அணிகளுக்கு முக்கியத்துவம் வாய்ந்த போட்டியாக மாறியுள்ளது.

ஆம். ஒரு பக்கம், இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் விளையாடி வரும் பார்டர் கவாஸ்கர் போட்டியின் 4வது டெஸ்ட் போட்டியின் கடைசி நாள் ஆட்டம். இன்னொரு பக்கம் இலங்கை - நியூசிலாந்து அணிகள் மோதும் டெஸ்ட் போட்டியின் கடைசி நாள் ஆட்டம்.

இந்த இரு போட்டிகளைப் பொறுத்தவரையில் இந்தியா இன்றைய போட்டியில் ஜெயித்தாக வேண்டிய சூழ்நிலை. அதேபோல் மற்றொரு போட்டியில் இலங்கை ஜெயித்தாக வேண்டிய சூழ்நிலை. இருவரில் யார் ஜெயிக்கிறார்களோ அவர்களுக்கே ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியின் இறுதிப் போட்டியில் பங்கேற்கும் வாய்ப்பு பிரகாசமாகும்.

அந்தவகையில் ஏற்கெனவே ஆஸ்திரேலிய அணி முதலிடத்தில் இருந்துவரும் நிலையில், ஏற்கெனவே இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றுவிட்டது. அடுத்து, 2ம் இடத்தில் 60.29 புள்ளிகளுடன் இந்தியாவும், மற்றும் 3ம் இடத்தில் 55.56 புள்ளிகளுடன் தென்னாப்பிரிக்காவும், 4ம் இடத்தில் 53.33 புள்ளிகளுடன் ஸ்ரீலங்காவும் இருக்கின்றன. 3ம் இடத்தில் தென்னாப்பிரிக்கா இருந்தாலும், தென்னாப்பிரிக்காவிற்கு வேறு டெஸ்ட் போட்டிகள் ஏதும் இல்லை. அந்தவகையில் தற்போது இலங்கை - நியூசிலாந்து அணிகளுக்கிடையேயான டெஸ்ட் தொடர் தற்போது நடந்துவரும் நிலையில், இலங்கை இறுதிப்போட்டிக்கு செல்லும் வாய்ப்பும் உள்ளது.

அதன்படி, இந்தியா இந்த கடைசி டெஸ்ட்டில் ஜெயித்தால் இறுதிப் போட்டிக்கு செல்லும் வாய்ப்பை தக்கவைத்துவிடும். ஒருவேளை இந்தியா இந்த டெஸ்ட் போட்டியில் தோற்றாலும், மற்றொரு டெஸ்ட் போட்டியான இலங்கை - நியூசிலாந்து இடையே நடந்துவரும் போட்டியில் இன்று நியூசிலாந்து ஜெயிக்கும் பட்சத்திலும் இந்தியா இறுதிப் போட்டிக்கு சென்றுவிடும்.

ஒருவேளை இந்தியா இந்த போட்டியில் தோற்று, இலங்கை தற்போது விளையாடி வரும் டெஸ்ட் தொடரின் 2 டெஸ்ட் போட்டியிலும் ஜெயிக்கும்பட்சத்தில் இலங்கை இறுதிப்போட்டிக்கு முன்னேறி இந்தியா வெளியேறும் சூழ்நிலை உருவாகிவிடும்.

அதனால் இன்றைய போட்டியில் இந்தியாவின் தலையெழுத்து நியூசிலாந்தின் வெற்றியில்தான் உள்ளது என்றும் கூறலாம்.

இந்தியா - நியூசிலாந்து விளையாடிவரும் 4வது டெஸ்ட் போட்டியைப் பொறுத்தவரை இரு அணிகளுமே நல்ல பேட்டிங்கை வெளிப்படுத்தி வருகின்றன. முதல் இன்னிங்சில் மட்டுமே ஒவ்வொரு அணிகளிலும் 2 பேர் சதமடித்துள்ளனர். அதிலும் விராட் கோலி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி 186 ரன்களைக் குவித்தார்.

5ம் நாள் கடைசி நாள் போட்டியாக தற்போது ஆஸ்திரேலிய அணி பேட்டிங் செய்துவரும் நிலையில் 1 விக்கெட் இழப்புக்கு 65 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறது. இந்திய அணி 26 ரன்கள் முன்னிலையில் இருந்தாலும், இந்த போட்டியைப் பொறுத்தவரை ஆட்டம் டிரா ஆவதற்கான வாய்ப்பு அதிகமாக உள்ளது.

அதனால் இந்தியாவின் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியின் இறுதிப் போட்டி வாய்ப்பு, இலங்கைக்கெதிரான இன்றைய போட்டியில் நியூசிலாந்தின் வெற்றியில் உள்ளது என்றுதான் கூறவேண்டும்.

மறுமுனையில் இலங்கை - நியூசிலாந்து அணிக்கான போட்டியில் தற்போது நியூசிலாந்து அணி பேட்டிங் செய்துவரும் நிலையில், 3 விக்கெட் இழப்புக்கு 227 ரன்கள் எடுத்துள்ளது. இன்னும் 60 பந்துகளில் 58 ரன்கள் எடுத்தால் மட்டுமே நியூசிலாந்து அணி வெற்றிபெறும். அதேபோல், இந்திய அணி இறுதிப் போட்டிக்குள் நுழையும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com