“நான் இந்திய அணியின் பயிற்சியாளராகச் சேர்ந்ததை டெண்டுல்கர் விரும்பவில்லை” கேரி கிர்ஸ்டன் மனம் திறக்கிறார்!

“நான் இந்திய அணியின் பயிற்சியாளராகச் சேர்ந்ததை டெண்டுல்கர் விரும்பவில்லை” கேரி கிர்ஸ்டன் மனம் திறக்கிறார்!

கிரிக்கெட் உலகில் சர்வதேச அளவில் பல சாதனைகளை படைத்தவர் கிரிக்கெட் பயிற்சியாளர்களில் ஒருவரான கேரி கிர்ஸ்டன். 2011 ஆம் ஆண்டு வரை உலகக் கோப்பைக்கான போட்டியில் இந்திய அணியை வழிநடத்திச் சென்று கிரிக்கெட் வரலாற்று புத்தகத்தில் முத்திரை பதித்தவர் கேரி கிர்ஸ்டன். ஆனால், 2008 ஆம் ஆண்டில் அவர் இந்திய அணி பயிற்சியாளராக சேர்ந்தபோது எதுவும் சரியாக இல்லை. எம்.எஸ்.தோனி தலைமையிலான இந்திய அணி, 2007 ஆம் ஆண்டிலேயே டி20 சர்வதேச போட்டியில் இந்திய அணி கோப்பை வென்றபோதிலும் சச்சின் டெண்டுல்கர் போன்ற நட்சத்திர வீரர்கள் மனதில் அவர் இடம்பெற முடியவில்லை. இந்திய அணி வீரர்களை ஊக்கப்படுத்துவது அவருக்கு கடினமான பணியாகவே இருந்தது.

இந்திய அணியின் பயிற்சியாளராக சேர்ந்தபோது தாம் எதிர்கொண்ட சவால்களை அவர் “ஃபைனல் வேர்ல்டு கிரிக்கெட்டில்” விடியோவாக பதிவு செய்துள்ளார். சச்சின் டெண்டுல்கரை மீண்டும் சிறந்த ஆட்டக்காரராக கொண்டுவருவது மிகப்பெரிய சவாலாக இருந்ததாக தென்னாப்பிரிக்காவின் கேரி கிர்ஸ்டன் குறிப்பிட்டுள்ளார்.

“ஒரு திறமையான அணியை, உலகை வெல்லும் அணியாக மாற்றுவதற்கு என்னவகையான தலைமை தேவை என்பதை கண்டுபிடிப்பதுதான் பெரும் புதிராக இருந்தது. எந்த பயிற்சியாளராக இருந்தாலும் அவருக்கு இந்த மனோநிலைதான் ஏற்பட்டிருக்கும். நான் பயிற்சியாளராக சேர்ந்தபோது அணி வீர்ர்களுக்கு இடையே பலவித கருத்து வேறுபாடுகள் இருந்தன. அவர்களுக்கு இடையே மகிழ்ச்சி இல்லாமல் இருந்தது. ஒவ்வொரு வீரரையும் தனிப்பட்ட முறையில் புரிந்து கொள்வதும் அவர்களை அணியில் எந்த இடத்தில் பொருத்துவது என்பதும், அவர்களை எப்படி மகிழ்ச்சியுடன் விளையாடவைப்பது என்பதும்தான் எனக்கு முக்கியமானதாக இருந்தது” என்று அந்த விடியோவில் குறிப்பிட்டுள்ளார் கிர்ஸ்டன்.

“நான் அணியின் பயிற்சியாளராக சேர்ந்ததை சச்சின் டெண்டுல்கர் விரும்பவில்லை என்பதை நான் ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும். மேலும் அவர் கிரிக்கெட்டை ரசித்தும் ஆடவில்லை.

நான் அணியின் பயிற்சியாளராக சேர்ந்தபோது அவர் திருப்தியுடன் இருந்தார். எனவே அவர் மீதுதான் நான் அதிகம் கவனம் செலுத்த வேண்டியிருந்தது. அவர் கிரிக்கெட்டை ரசித்து ஆடவில்லை. ஒரு கட்டத்தில் அவர் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வுபெற்றுவிடலாமா என்றுகூட அவர் நினைத்திருக்கக்கூடும். அணிக்கு அவரது பங்களிப்பு அதிகம் தேவை என்பதால் அவரை தொடர்பு கொள்வது அவசியம் என நினைத்தேன்.

உடனடியாக அதற்கான வேலைகளில் ஈடுபட்டேன். அப்போது அணித்தலைவராக இருந்த எம்.எஸ்.தோனியுடன் அவர் சேர்ந்து செயல்பட வைத்தேன். இதையடுத்து இருவரும் இந்திய அணியை புதிய உச்சத்திற்கு கொண்டு சென்றார்கள்.

எந்த ஒரு பயிற்சியாளரும் அணிக்காக விளையாடும் வீரர்கள் குழுவையே விரும்புவார்களே தவிர தனக்காக விளையாடுபவர்களை விரும்பமாட்டார்கள். இந்திய அணியினர் தனிப்பட்ட சூப்பர்ஸ்டார்களாக நினைத்து விளையாடுவதை தவிர்த்து அவர்கள் அணிக்காக விளையாட வேண்டும் என்ற மனோநிலையை உருவாக்கினேன். இதற்கிடையே எம்.எஸ்.தோனியும் அணி சிறப்பாக செயல்படுவதில் கவனம் செலுத்தினார். கோப்பைகளை வெல்வதே அவரது இலக்காக இருந்தது. அணியை ஒருங்கிணைப்பதில் அவர் வல்லவராக இருந்தார். தனிப்பட்ட ஆட்டத்தைவிட அணிக்கான ஆட்டம்தான் முக்கியம் என்பதை அவர் வெளிப்படையாகவே கூறிவந்தார். அவரது அணுகுமுறை பலரையும் ஈர்த்தது. சச்சின் மீண்டும் கிரிக்கெட்டை ரசித்து ஆடத் தொடங்கினார். தன்னாலும் அணியின் வெற்றிக்கு பெரும் பங்களிப்புச் செய்ய முடியும் என்பதை உணர்ந்து டெண்டுல்கர் சிறப்பாக ஆடினார் என்று கேரி கிர்ஸ்டன் தெரிவித்துள்ளார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com