புள்ளிப்பட்டியலில் முன்னேறி வரும் பெங்களூர் அணி!
லக்னோ அணிக்கும், பெங்களூர் அணிக்கும் நடந்த ஐபிஎல் போட்டியில் பெங்களூர் அணி 18 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் முன்னேறியது.
நேற்றைய ஐபிஎல் 16வது சீசன் 43வது போட்டியில் லக்னோ அணியும் பெங்களூர் அணியும் மோதின.
டாஸை வென்ற பெங்களூர் அணி கேப்டன், முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார்.
அதன்படி, பெங்களூர் அணி களமிறங்கியது. நேற்றைய போட்டி விறுவிறுப்பாக அமையும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ஆரம்பமே சற்று நிதானமாக ஆரம்பித்தது. பின்னர் வேகமெடுக்கும் என்று எதிர்பார்த்தால், அதன்பிறகு வந்த வீரர்களின் ஆட்டம் எதிர்பார்த்தபடி அதிரடியாக அமையவில்லை.
இதையடுத்து, விராட் கோலி 30 பந்துகளில் 31 ரன்களும், பாப் டூ ப்ளஸிஸ் 40 பந்துகளில் 44 ரன்களும் எடுத்ததையடுத்து, பெங்களூர் அணி 20 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு 126 ரன்களை எடுத்தது.
பின்னர், 127 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற சுலமான இலக்கை நோக்கி லக்னோ அணி களமிறங்கியது.
லக்னோ அணி சுலபமாக ஜெயித்துவிடுவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவர்களும் மோசமான பேட்டிங்கையே வெளிப்படுத்தினர்.
லக்னோ அணியில் கிருஷ்ணப்பா கௌதம் மட்டும் ஓரளவு விளையாடி 13 பந்துகளில் 2 சிக்ஸர், 1 பவுண்டரி உட்பட 23 ரன்களை எடுத்தார்.
இதையடுத்து, லக்னோ அணி 19.5 ஓவர் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 108 ரன்களை மட்டுமே எடுத்தது.
இதையடுத்து, பெங்களூர் அணி 18 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில், 10 புள்ளிகளுடன் 5ம் இடத்திற்கு முன்னேறியுள்ளது.