கம்பீரமாக இறுதிப்போட்டிக்குள் நுழைந்த குஜராத் அணி!
ஐபிஎல் 2023 16வது சீசன் போட்டியின் 2வது குவாலிஃபயர் போட்டியில் குஜராத் அணியும் மும்பை அணியும் மோதின. டாஸை வென்ற மும்பை அணி கேப்டன் ரோகித் சர்மா பவுலிங்கைத் தேர்வு செய்தார்.
இதையடுத்து குஜராத் அணியின் துவக்க வீரர்கள் விரிதிமன் சாஹா, சுப்மன் கில் இருவரும் களமிறங்கினர். நேற்றைய ஆட்டமானது லேசான மழையால் சற்று தாமதமாக துவங்கினாலும், யாரும் எதிர்பார்ககாத அளவுக்கு சிக்ஸர் மழை பொழிந்து ரசிகர்களை உற்சாகப்படுத்தினார் சுப்மன் கில்.
விரிதிமன் சாகா சற்று பொறுமையாக ஆடிவந்த நிலையில், 6.2 ஓவரில் அணியின் ஸ்கோர் 54-ஆக இருந்தபோது 18 ரன்கள் எடுத்த நிலையில் சாகா அவுட்டானார். பின்னர் சுப்மன் கில் உடன் சாய் சுதர்ஸன் ஜோடி சேர்ந்தார்.
இருவரும் சேர்ந்து மும்பை அணி பந்துவீச்சாளர்களை திணறடித்தனர். மும்பை அணியினர் எவ்வளவோ போராடியும் இந்த ஜோடியை பிரிக்க முடியவில்லை.

அதிலும் சுப்மன் கில் நேற்றைய போட்டியில் 7 பவுண்டரிகள் மட்டும் அடித்த நிலையில் 10 சிக்ஸர்களை விளாசி 60 பந்துகளில் 129 ரன்களைக் குவித்து அணியின் ஸ்கோரை பலமாக உயர்த்தினார்.
பின்னர், 20 ஓவர் முடிவில் குஜராத் அணி 3 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 233 ரன்களைக் குவித்தது.
இதையடுத்து 234 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி மும்பை அணி களமிறங்கியது.
ஆனால் துவக்க வீரர்களான ரோகித் சர்மா 8 ரன்களுடனும், நேஹல் வதேரா 4 ரன்களுடனும் ஆட்டமிழக்க, கேமரூன் க்ரீன் (30), சூர்யகுமார் யாதவ் (61), திலக் வர்மா (43) மூவரும் மட்டுமே ஓரளவுக்கு சிறப்பாக விளையாடி ரன்களைக் குவித்தனர்.
இவர்களைத் தொடர்ந்து களமிறங்கிய வீரர்களும் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க, மும்பை அணி 18.2 ஓவர் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 171 ரன்களை மட்டுமே எடுத்தது. குஜராத் அணியின் மோஹித் சர்மா 2.2 ஓவர்களில் 10 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்து 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். 129 ரன்கள் எடுத்த சுப்மன் கில் ஆட்டநாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இதையடுத்து, குஜராத் அணி 62 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது.