10 விக்கெட்டுடன் ஆட்ட நாயகன் விருதை வென்ற நாயகன்!
ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் கிரெக் மாத்தியூஸ் (Greg Matthews) என்பவர் சிறிது வித்தியாசமான கிரிக்கெட் வீரர். 33 டெஸ்ட் மேட்சுகளில் 1848 ரன்களும், 61 விக்கெட்டுகளும் எடுத்துள்ளார். ஒரு நாள் மற்றும் சர்வதேச ஆட்டங்களில் பங்கு பெற்றவரான இவர், டெஸ்ட் மேட்சில் பவுலிங் செய்யும்பொழுது தலையில் தொப்பி (Cricket Cap) அணிந்துக் கொண்டு பந்து வீசியவர். கிரிக்கெட் டெஸ்ட் சரித்திரத்தில் இடம் பெற்றுள்ள இரண்டாவது டைட் டெஸ்டில் (Tied test) சென்னை சேப்பாக் மைதானத்தில் நிகழ்ந்தபோது, இவர் எடுத்த 10 விக்கெட்டுகள் இவருக்கு ஆட்ட நாயகன் விருதைப் பெற்று தந்தது. அதிலும், இந்த மேட்சில் கொளுத்தும் வெயிலில், இவர் மட்டும் ஸ்வெட்டர் அணிந்து கொண்டு விளையாடி அசத்தினார்.

ஸர் கார்பீல்ட் சோபர்ஸ் 1968 ஆம் ஆண்டு ஒரே ஓவரில் 6 சிக்ஸர்கள் அடித்து, முதல் தர கிரிக்கெட் மேட்சில் உலக சாதனைப் படைத்தார். அதுவரையில், 57 வருடங்களுக்கு முன், டெட் அலெட்சன் (Ted Alletson) என்பவர் ஒரு ஓவருக்கு அதிக பட்ச ரன்களாக 34 ரன்களை எடுத்து இருந்ததே சாதனையாக கருதப்பட்ட நிலையில், அவரது சாதனையை சோபர்ஸ் முறியடித்தார்.
ஒரே ஓவரில் 32 ரன்களை முதல் தர கிரிக்கெட்டில் கிளைவ் இன்மான் (Clive Inmaan) என்பவர் எடுத்த சம்பவமும் உண்டு. லெய்செஸ்டேர்ஷைர் (Leicestershire) என்ற அணிக்காக நோட்டிங்ஹாம்ஷைர் (Nottinghamshire) என்ற அணிக்கு எதிராக எடுத்தார்.
சோபர்ஸ் இரண்டு கைகளிலும் தலா ஆறு, ஆறு விரல்களுடன்பிறந்தவர். பத்து வயதாவதற்கு முன்பு முதல் ஆறாவது விரலையும், 14 வது வயதில் மற்றொரு ஆறாவது விரலையும் இழந்தார்.

இவர் 17வது வயதில் தனது முதல் டெஸ்டை இங்கிலாந்திற்கு எதிராக இடது கை பந்து வீசுபவராக அறிமுகம் ஆனார். பேட்டிங்கில் 14 நாட் அவுட் மற்றும் 26 ரன்கள் எடுத்தார். பவுலிங்கில் 75 ரன்கள் கொடுத்து 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார் என்பதும் குறிப்பிடத்தக்கது.