ஐபிஎல் 2023 16வது சீசன் போட்டியில் நேற்று எலிமினேட்டர் போட்டியில் மும்பை அணியும் லக்னோ அணியும் மோதியது. டாஸை வென்ற மும்பை அணி, முதலில் பேட்டிங்கை தேர்வு செய்து விளையாடியது.
நேற்றைய போட்டியைப் பொறுத்தவரை கேமரூன் க்ரீன், சூர்யகுமார் யாதவ், திலக் வர்மா, வதேரா என வீரர்கள் அவரவரர் பங்குக்கு சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இதையடுத்து, மும்பை அணி 20 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 182 ரன்களை எடுத்துது.
183 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி, லக்னோ அணி களமிறங்கிய நிலையில், துவக்கம் முதலே லக்னோ அணி சறுக்கலை சந்தித்து வந்தது. மார்கஸ் ஸ்டோய்னிஸ் மட்டும் ஓரளவுக்கு சிறப்பாக ஆடி 40 ரன்களைக் குவித்தார்.
இருந்தாலும் மற்ற வீரர்களின் மோசமான ஆட்டத்தால் லக்னோ அணி 16.3 ஓவரிலேயே 10 விக்கெட்டையும் இழந்து 101 ரன்களை மட்டுமே எடுத்தது.
இதையடுத்து மும்பை அணி, 81 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று, 2வது குவாலிஃபயர் போட்டி சுற்றுக்கு முன்னேறியுள்ளது. இப்போட்டியில் தோல்வியுற்ற லக்னோ அணி பிளே ஆஃப் சுற்றிலிருந்து வெளியேறியது.
இப்போட்டியில் மும்பை அணியின் பந்துவீச்சாளர் ஆகாஷ் மத்வால் சிறப்பாக பந்துவீசி 3.3 ஓவர் பந்து வீசி, வெறும் 5 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்து, 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். இதன்மூலம் இவர் ஐபிஎல்-லில் கும்ப்ளேவின் சாதனையும் சமன் செய்துள்ளார்.
அதாவது, அனில் கும்ப்ளே கடந்த 2009ம் ஆண்டு பெங்களூரு அணிக்காக விளையாடியபோது, ராஜஸ்தான் அணிக்கெதிராக 3.1 ஓவர் பந்து வீசி 5 ரன்களை விட்டுக்கொடுத்து, 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். தற்போது 14 வருடங்களுக்குப் பின் இந்த சாதனையை சமன் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.