விராட் கோலி விளாசல்! இந்தியா 4 விக்கெட் இழப்புக்கு 288

விராட் கோலி விளாசல்! இந்தியா 4 விக்கெட் இழப்புக்கு 288

மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிராக போர்ட் ஆப் ஸ்பெயினில் நடைபெறும் இரண்டாவது டெஸ்ட் போட்டியின் முதல்நாள் ஆட்ட முடிவில் இந்திய அணி 4 விக்கெட்டுகளை இழந்து 288 ரன்கள் எடுத்திருந்த்து. விராட் கோலி- ரவீந்திர ஜடேஜா ஜோடி நின்று ஆடி 106 ரன்கள் குவித்தது ஆட்டத்தின் சிறப்பு அம்சமாகும். கோலிக்கு இது 500-வது சர்வதேச போட்டியாகும்.

தொடக்க ஆட்டக்காரர்களான ரோஹித் சர்மாவும், புதிய ஆட்டக்காரர் ஜெய்ஸ்வால் இருவரும் இணைந்து ஆடி 121 ரன்கள் எடுத்த போதிலும் ஆட்ட முடிவில் இந்தியா நான்கு விக்கெட்டுகளை இழந்திருந்தது.

ஜெய்வால் 57 ரன்கள் எடுத்திருந்தபோது ஜாஸன் ஹோல்டர் வீசிய பந்தில் மெக்கன்ஸியிடம் காட்ச் கொடுத்து அவுட்டானார். அடுத்து விளையாட வந்த சுபம் கில்லும் வெகுநேரம் நீடிக்கவில்லை. கில் 10 ரன்கள் எடுத்த நிலையில் ரோச் வீசிய பந்தில் ஜோஷுவாவிடம் கேட்ச் கொடுத்து அவுட்டானார்.ரஹானே 36 பந்துகளை சந்தித்து 8 ரன்களை மட்டுமே எடுத்திருந்த நிலையில் கபிரியேல் வீசிய பந்தில் ஸ்டம்பு எகிறவே அவுட்டாகி வெளியேறினார்.

முதல்நாள் ஆட்டத்தில் விராட் கோலியின் பேட்டிங் சிறப்பாக இருந்தது. நிதானமாகவும், பொறுமையாகவும் திறமையை வெளிப்படுத்தி அவர் விளையாடினார். 30-வது முறையாக டெஸ்ட் போட்டிகளில் அவர் அரை சதத்தை எட்டியுள்ளார்.முதல்நாள் ஆட்ட இறுதியில் விராட் கோலி 87 ரன்களுடனும் ஜடேஜா 36 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

இந்த போட்டி இந்திய அணிக்கும், மேற்கிந்திய தீவுகள் அணிக்கும் இடையிலான 100 ஆவது டெஸ்ட் போட்டியாகும்.

மேற்கிந்திய தீவுகள் அணியில் இரண்டு மாற்றங்கள் செய்யப்பட்டிருந்தன. ரஹீம் கார்ன்வாலுக்கு பதிலாக கேபரியேலும், ரேமன் ரெய்ஃபருக்கு பதிலாக கிர்க் மெக்கன்ஸியும் அணியில் சேர்க்கப்பட்டிருந்தனர். இந்திய அணியில் ஷர்துல் தாகுருக்கு பதிலாக மிதவேக பந்துவீச்சாளர் முகேஷ் குமார் அணியில் இடம்பெற்றுள்ளார்.

கோலி-ஜடேஜா இருவரும் எந்த தவறும் செய்யாமல் கடைசிவரை நின்று ஆடினர். ஒரு கட்டத்தில் 2 வது ரன்னுக்கு கோலி முயன்று பின் பின்வாங்கி டைவ் அடித்து கீரீஸை தொட்டபோது அவருக்கு லேசான காயம் ஏற்பட்டது. இதற்கு அவர் மருத்துவ உதவியை நாடினார். இதேபோல விராட் கோலி அடித்த பந்தை தடுக்க முற்பட்ட போது மேற்கிந்திய அணி வீர்ர் சந்தர்பாலுக்கு மணிக்கட்டில் லேசான காயம் ஏற்பட்டது. மேற்கிந்திய தீவுகள் அணியின் வேகப்பந்து வீச்சாளர்கள் ஆட்டத்தின் முதல் பாதியில் சோபிக்கவில்லை. எனினும் இடைவேளைக்குப் பின் அந்த அணியின் பந்துவீச்சாளர்கள் முறையாக பந்து வீசினர்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com