சதம் அடித்து பழிதீர்த்த விராட் கோலி: முதல் இன்னிங்ஸில் இந்தியா 438!

சதம் அடித்து பழிதீர்த்த விராட் கோலி: முதல் இன்னிங்ஸில் இந்தியா 438!

Published on

போர்ட் ஆப் ஸ்பெயினில் மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டத்தில் இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 438 ரன்கள் எடுத்திருந்தது. விராட் கோலி அதிரடியாக ஆடி 121 ரன்கள் குவித்தார். மேற்கிந்திய தீவுகள் அணி முதல் இன்னிங்ஸில் ஆட்ட முடிவில் 1 விக்கெட் இழப்புக்கு 86 ரன்கள் எடுத்திருந்தது.

முதல் டெஸ்ட் போட்டியில் சதத்தை தவறவிட்ட விராட் கோலி, இந்த முறை சதம் அடித்து பழிதீர்த்துக் கொண்டார். அவர் எடுத்த 121 ரன்களில் 11 பவுண்டரிகள் அடங்கும்.  இது அவருக்கு 29 டெஸ்ட் சதம் ஆகும். கோலி, ரவீந்திர ஜடேஜாவுடன் சேர்ந்து 5-வது விக்கெட்டுக்கு 159 ரன்கள் குவித்தனர். ரவீந்திர ஜடேஜா 61 ரன்கள் எடுத்தார். அடுத்துவந்த அஸ்வின் 56 ரன்களில் ரோச் வீசிய பந்தில் அவுட்டானார்.

இரண்டாவது நாள் ஆட்டத்தின் முதல் பாதி விராட் கோலிக்கு சாதகமாக இருந்தது. மேற்கிந்திய தீவுகள் அணியின் பந்துவீச்சாளர்களால் அவரை அசைக்க முடியவில்லை. முடிவில் கோலி 121 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ரன் அவுட்டானார்.

மேற்கிந்திய தீவுகள் அணியின் கேப்டன் கிரெய்க் பிராத்வைட், சந்தர்பால் இருவரும் முதல் இன்னிங்ஸை தொடங்கினர். முகமது சிராஜ், ஜெய்தேவ் உனாத்கட் மற்றும் முகேஷ் குமார் மூவரும் பந்துவீசியும் எந்த பலனும் ஏற்படவில்லை. பிராத்வைட், சந்தர்பால் இருவரும் 71 ரன்கள் சேர்த்திருந்தபோது சந்தர்பால் 33 ரன்களில் ஜடேஜா பந்துவீச்சில் அவுட்டானார். இதையடுத்து இரண்டாம் நாள் ஆட்ட முடிவில் பிராத்வைட் 37 ரன்களுடனும், கிர்க் மெக்கன்ஸி 14 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தனர். இறுதியில் மேற்கிந்திய தீவுகள் அணி 86 ரன்களுக்கு ஒரு விக்கெட்டை இழந்திருந்தது.

logo
Kalki Online
kalkionline.com