
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை அணி, இந்திய அணியுடன் விளையாடி வருகிறது. இந்நிலையில், ஹார்திக் பாண்டியா தலைமையிலான டி20 போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றதையடுத்து, தற்போது ரோகித் சர்மா தலைமையில் 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடர் நாளை நடைபெறவிருக்கிறது. இந்நிலையில் அணியில் யாரை சேர்ப்பது? யாரை நீக்குவது? என்ற குழப்ப நிலையில் ரோகித் சர்மா தள்ளப்பட்டிருக்கிறார்.
இந்திய அணியில் மிடில் ஆர்டரைப் பொறுத்தவரை ஸ்ரேயாஸ் ஐயர் மற்றும் சூர்யகுமார் யாதவ் இருவருக்குமிடையே போட்டி நிலவி வருகிறது. ப்ளேயிங் 11 அணி தேர்வைப் பொறுத்தவரை, ஓப்பனிங்கில் ரோகித் சர்மா அவருடன் சுப்மன் கில் இணைந்து விளையாடுவர். இருவரையும் தொடர்ந்து கோலியும், 5 மற்றும் 6வது இடத்தில் கே.எல்.ராகுல், ஹார்திக் பாண்டியா இருவரும் உள்ளனர்.
இந்நிலையில் 4 வது இடத்திற்கு சூர்யகுமார் யாதவ் மற்றும் ஸ்ரேயாஸ் ஐயர் இருவருக்கும் கடும்போட்டி இருப்பதாக கூறப்படுகிறது. ஸ்ரேயாஸ் ஐயரைப் பொறுத்தவரை அவர் நிதானமாகவும், நேர்த்தியாகவும் விளையாடி அணியை மீட்கக்கூடியவர். அதனால் அவருடைய பங்களிப்பும் அவசியமாக பார்க்கப்படுகிறது.
அதேபோல் சூர்யகுமார் யாதவ் பொறுத்தவரை அவரும் சமீபகாலங்களில் மிரட்டலாக விளையாடி அணியை வெற்றிப் பாதைக்கு கொண்டு சென்றுள்ளார். அதனால் இவருடைய தேவையும் இந்திய அணிக்கு பக்கபலம்தான். இதனாலேயே இருவரும் இருப்பார்களா? அல்லது ஒருவர்தானா? என்ற குழப்பமும் நீடித்து வருகிறது.
ஒருவேளை, ஃபார்மில் இருக்கும் இருவருக்கும் வாய்ப்பு தர நினைத்தால், கே.எல்.ராகுலை நீக்கிவிட்டு, இருவரையும் சேர்த்து, பின்னர் இவருக்கு கடைசி வாய்ப்பாக கொடுக்கலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், இந்தியா-இலங்கை அணிகள் மோதும் 3 ஒருநாள் போட்டி தொடர் நாளை கவுகாத்தியில் நடைபெற இருக்கிறது. இந்திய நேரப்படி மதியம் 1.30 மணிக்கு போட்டி தொடங்குகிறது.