கொரோனா வைரஸ் இயற்கையாக உருவானது அல்ல, சில நாடுகளால் திட்டமிட்டு பரப்பப்பட்டது என்கிற செய்தி ஒன்றும் புதிதல்ல. ஊரடக்கம் அறிவிக்கப்பட்ட முதல் நாள் முதல் பேசப்பட்டு வந்தது. ஆனால், இது பற்றி பேசுவதற்கு உலக சுகாதார அமைப்பு தடை விதித்திருந்தது.
கொரோனா பரவல் என்பது உலகளாவிய பேரழிவு. ஏதோ ஒரே நாட்டை மட்டும் குறை கூறக்கூடாது என்பது உலக சுகாதார அமைப்பின் வாதம். அதை ஏற்றுக்கொண்ட பல நாடுகளும் யாரையும் குறைசொல்லாமல் இதிலிருந்து மீண்டு வரும் வழியை பற்றி மட்டும் யோசிக்கலாம் என்று முடிவு செய்திருந்தன.
சீனாவிலிருந்துதான் கொரோனா தொற்று பரவியது என்று அமெரிக்கா முதல் ஆண்டிப்பட்டி வரை பேச்சு இருந்தும் சீனா அதை தொடர்ந்து மறுத்து வந்தது. இரண்டு நாட்களுக்கு முன்னர் அமெரிக்கா புலனாய்வு அமைப்பான எஃப்.பி.ஐ அமைப்பு, சீன அரசுக்கு சொந்தமான ஆய்வகத்தில் இருந்தே கொரோனா தொற்று தோன்றியிருக்க வாய்ப்பிருப்பதாக குறிப்பிட்டது.
வூகான் மாகாணத்தில் உள்ள ஆய்வகத்தில் இருந்து கொரோனா பரவியது என்ற குற்றச்சாட்டை சீனா தொடர்ந்து மறுத்துவருகிறது. இந்த குற்றச்சாட்டு அவதூறானது என்றும் அந்நாடு கூறியுள்ளது. சீனாதான் கொரோனா தொற்றுநோயின் பிறப்பிடம் என்பதை அடையாளம் கண்டுகொள்ள வேண்டியது அவசியம். ஆனால், அதை மறைக்கும் அத்தனை முயற்சிகளையும் சீனா தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது என்று எஃப்.பி.ஐ அமைப்பு பதிலடி தந்திருக்கிறது.
இந்நிலையில் கொரோனா வைரஸ் இயற்கையாக உருவானது அல்ல, அது சில நாடுகள் செய்த சதி என்று ஸ்ரீலஸ்ரீ ரவிசங்கர் தெரிவித்திருக்கிறார். சில நாடுகளின் சதி கொரோனா வைரஸ் காரணமாக மக்கள் 2 ஆண்டுகள் வீட்டுக்குள் முடங்க வேண்டியிருந்தது. கொரோனா வைரஸ் இயற்கையாக உருவானது அல்ல என்று அப்போதே தெரிவித்தேன்.
இதுவொரு கிருமிப் போர். எனது சீடர்கள் கேட்டுக்கொண்டதாலும் சர்ச்சையை ஏற்படுத்த வேண்டாம் என்று நினைத்ததால் இது குறித்து விளக்கமாக பொதுவெளியில் பதிவு செய்யவில்லை. கொரோனா தடுப்பூசி மருந்து எதிர்பார்த்த அளவு பலன் அளிக்கவில்லை என்று பெரிய நாடுகள் கூட கூறுகின்றன. கொரோனா தடுப்பு மருந்தாக மூலிகை மற்றும் ஆயுர்வேத மருந்துகளை பயன்படுத்த வேண்டும் என்றார்.
சமீபத்தில் கோவையில் நடைபெற்ற ஜக்கி வாசுதேவ் மகாசிவராத்திரி விழாவைப் போல் பெங்களூரில் ஒரு பெரும் மகா சிவராத்திரி நிகழ்வை ஸ்ரீலஸ்ரீ ரவிசங்கர் நிகழ்த்திக் காட்டினார். ஆன்மீக மட்டுமல்லாமல் அரசியல், சமூக சார்ந்த விஷயங்கள் பற்றியும் தொடர்ந்து பேசிவருகிறார்.