இலங்கை அதிபர் தேர்தலில் வெற்றிபெற்ற தேசிய மக்கள் சக்தி முன்னணி வேட்பாளர் அனுரகுமார திசாநாயக இன்று பதவியேற்கவுள்ளார்.
இலங்கை அதிபர் தேர்தலில் தேசிய மக்கள் சக்தி முன்னணி வேட்பாளர் கட்சி வெற்றிபெற்றது. இதனையடுத்து இரண்டாவது இடத்தை எதிர்க்கட்சி தலைவர் சஜீத் பிரேமதாச பிடித்தார். மற்றும் ரணில் விக்ரமசிங்கே 3வது இடத்தைப் பிடித்தார்.
முதல் சுற்று வாக்கு எண்ணிக்கையில் யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காத நிலையில், 2வது முறை வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. இலங்கை வரலாற்றிலேயே இரண்டாவது முறை வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது இதுவே முதல்முறையாகும். இதனையடுத்துதான் தேசிய மக்கள் சக்தி முன்னணி வேட்பாளர் அனுரகுமார திசாநாயக வெற்றிபெற்றது உறுதியானது. அந்தவகையில் இன்று கொழும்பில் உள்ள அதிபர் செயலகத்தில் அதிபராக இவர் பதவியேற்கவுள்ளார்.
அனுரகுமார திசாநாயக தேர்தலில் போட்டியிடுவதற்கு முன்னர் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தார். 2014 முதல் மக்கள் விடுதலை முன்னணி கட்சித் தலைவராகவும், 2019 முதல் தேசிய மக்கள் சக்தியின் தலைவராகவும் இருந்தார். அதே ஆண்டு அதிபர் தேர்தல் வேட்பாளராக இருந்தார். 2004 முதல் 2005ம் ஆண்டு வரை வேளாண்மை, கால்நடைத்துறை, நீர்வளத்துறை அமைச்சராக இருந்தவர் அனுர குமார திசாநாயக.
அனுர குமார திசாநாயக கம்யூனிச கொள்கை உடையவர் என்பதால், சீனாவுடன் நெருக்கம் காட்டுவார் என்று அரசியல் விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர். ஒருவேளை இரண்டாவது இடத்தைப் பிடித்த சஜீத் வெற்றிபெற்றிருந்தால் அவர் இந்தியாவுக்கு சாதகமாக இருந்திருப்பார். ஆனால், தற்போது இந்தியா – இலங்கை உறவு சுமூகமாக நகருமா என்பது சந்தேகம்தான்.
இன்று இவர் பதிவியேற்கவுள்ள நிலையில், பிரதமர் தினேஷ் குணவர்தன இன்று பதவி விலகவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. தற்போதைய பிரதமர் மற்றும் தற்போது பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து அமைச்சர்கள் சபையும் இன்று அமைச்சர் பதவியை விட்டு விலகவுள்ளனர். புதிய அதிபருக்கு நெருக்கமானோர் அமைச்சரவையில் நியமிக்கப்படவுள்ளதாக செய்திகள் வந்துள்ளன.
இதனால், தற்போது அமைச்சுப் பதவிகளில் கடமையாற்றும் அமைச்சர்களும் அவரது தனிப்பட்ட ஊழியர்களும் வெளியேறவுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் கூறுகின்றன.