

சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கில் , திமுகவின் மகளிர் அணி மற்றும் மகளிர் தொண்டர் அணி பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கலந்து கொண்ட திமுக தலைவர் ஸ்டாலின், தனது தங்கை கனிமொழிக்கு கூட்டத்தினை கூட்டியதற்கு பாராட்டு தெரிவித்து விட்டு பேசத் தொடங்கினார்.
தேர்தலுக்கு முன்னர் வீடு வீடாக சென்று , சமூக வலைதளங்களின் வழியாக செயல்பட்டு நீங்கள் பல்வேறு பணிகளை செய்துள்ளீர்கள். திமுக பெற்றுள்ள வாக்குகளுக்கு உங்களுடைய முயற்சிகள் காரணமாக அமைந்தது என்பதை மறுத்திட முடியாது. அதற்கு மனப்பூர்வமான நன்றியினை உங்களிடம் கூறுகிறேன். இப்போது எதிர்க்கட்சியாக இருக்கிற நாம் மீண்டும் ஆளுங்கட்சியாக மாற வேண்டும் என்றால், இன்னும் சுறுசுறுப்பாகவும் வேகமாக செயல்பட வேண்டும். அதற்காகத்தான் இந்த கூட்டம் நடந்து கொண்டிருக்கிறது.
நான் பேசிய பேச்சினை திரித்து ஆட்சியை கவிழ்க்க சதி செய்வதாக கூறி நம் எதிரிகள் அழுது கொண்டிருக்கிறார்கள். நான் ஏற்கனவே பலமுறை சொன்னது போல இப்போதும் சொல்கிறேன் திமுக பொறுப்பான, விழிப்பான, எதிர்கட்சியாக தன்னுடைய கடமையை உறுதியுடன் செய்யும். இந்த ஆட்சியின் அவலங்களை தொடர்ந்து சுட்டிக் காட்டுவோம், கேள்வி கேட்போம். அடுத்து எப்போது தேர்தல் நடந்தாலும் மக்களே இந்த ஆட்சியை அகற்றி விடுவார்கள்.
நம்முடைய திராவிட மடல் ஆட்சியில் கலைஞர் மகளிர் உரிமை திட்டம் , புதுமைப்பெண் திட்டம் இன்று ஏராளமான திட்டங்களை நாம் உருவாக்கினோம். இப்போது நடந்து முடிந்த தேர்தலில் கூட பெண்களுக்கு நிறைய வாக்குறுதிகள் கொடுத்தோம். இல்லத்தரசிகளுக்கு 8000 ரூபாய் கூப்பன் கொடுக்கும் திட்டம், உரிமைத்தொகை உயர்வு என்று நிறைய வைத்திருந்தோம்.
தற்போது மக்கள் தற்போது தினமும் நடைபெறும் குற்ற சம்பவங்கள், சென்னை உள்பட பல நகரங்கள் இருளில் மூழ்கியது , பயிர் கடன் தள்ளுபடி என்று நடந்த நாடகம் அனைத்தையும் பார்த்து, "ஏன்டா, இந்த ஆட்சிக்கு வாக்களித்தோம்?" என்று கோபமாக , ஆவேசமாக இருக்கிறார்கள். ஓட்டு போட்டவர்களும் வருத்தப்படுகிறார்கள் ஓட்டு போடாதவர்கள் வருத்தப்படுகிறார்கள்.
பொதுவாக ஷாப்பிங் போனால் டிரஸ் வாங்குவார்கள், வீட்டுக்கு தேவையான பொருட்களை வாங்குவார்கள். ஆனால், நம்முடைய முதல்வர் விஜய் அதிமுக எம்எல்ஏக்களை ஷாப்பிங் செய்து கொண்டிருக்கிறார். அவர் ஆட்சியின் மீது அவருக்கே நம்பிக்கை இல்லையா? அல்லது ஆதரவு கொடுக்கும் கூட்டணி கட்சிகளின் மீது நம்பிக்கை இல்லையா? முதலில் அவர் ஆட்சியைக் காப்பாற்ற அதிமுக எம்எல்ஏக்களை தவெகவிற்கு ஆதரவாக வாக்களிக்க வைத்தார்.
பின்னர் அவர்களை ராஜினாமா செய்ய வைத்து, தங்கள் கட்சியில் இணைத்துக் கொள்கிறார். பல மாநிலங்களில் பாஜக செய்வதை இங்கு விஜய் செய்து கொண்டிருக்கிறார். பாஜகவின் ஜெராக்ஸ் காபி மாதிரி செயல்படுகிறார். அவர் தீர்ந்து போன சக்தி என்று சொன்னவர்களின் உறுப்பினர்களையே இழுத்துக் கொண்டிருக்கிறார். தீர்ந்து போன சக்தியிடம் திருடும் இவர் எவ்வளவு காய்ந்து போன சக்தியாக இருப்பார் என்று பாருங்கள்.
டெல்லியில் பிரதமர் தலைமையில் முதலமைச்சர்கள் ஆலோசனைக் கூட்டத்தில் அவர் கலந்து கொள்கிறார். இதே நான் டெல்லி சென்ற பொழுது, "அமலாக்க துறையின் வழக்கில் இருந்து தப்பிப்பதற்காக போனார்" என்று குற்றம் சாட்டினார். இப்போது நான் கேட்கிறேன் கரூர் சிபிஐ வழக்கிலிருந்து தப்பிக்க தான் நீங்கள் டெல்லிக்கு சென்றீர்களா?
என்னுடைய பேச்சினை பட்டி பார்த்தது போல் முதல்வர் விஜய் டெல்லியில் பேசியுள்ளார். நம்மை நம்பி ஒரு கோடியே 55 லட்சம் பேர் வாக்களித்திருக்கிறார்கள் , அவர்களுடைய நம்பிக்கையையும் நாம் காப்பாற்ற வேண்டும். என்று திமுக தலைவர் ஸ்டாலின் பேசியிருந்தார். இந்த கூட்டத்திற்கு வருகை தந்த பெண்களுக்கு அழகான பிராண்டட் வாட்ச்கள் அன்பளிப்பாக வழங்கப்பட்டன. வாட்ச்களை பெற ஒரு சிலர் முண்டியடித்ததால் கூட்டத்தில் சில நிமிடங்கள் பரபரப்பு ஏற்பட்டது .