

திருவாரூரில் இன்று முன்னாள் அமைச்சர் மதிவாணன் வீட்டு இல்ல திருமண விழாவில், திமுக தலைவர் மு க ஸ்டாலின் கலந்து கொண்டார். இந்த திருமண விழாவில் முத்தரசன் , ஆ. ராசா உள்ளிட்ட பல அரசியல்வாதிகளும் கலந்து கொண்டனர். சட்டமன்றத் தேர்தல் முடிந்த பின்னர் திமுக கூட்டணியில் இருந்த கட்சிகள் அனைத்தும் , விஜய் தலைமையிலான தமிழக வெற்றி கழகத்திற்கு ஆதரவு கொடுத்து ஆட்சி அமைக்க உதவினர். அதன் பின்னர் கம்யூனிஸ்ட் கட்சிகளை தவிர, மற்ற கூட்டணி கட்சிகள் அனைத்தும் தவெக கூட்டணி அமைச்சரவையில் பதவிகளை பெற்றனர்.
திமுக கூட்டணியில் இருந்து பல கட்சிகள் விலகியதிலிருந்து , பொது நிகழ்ச்சிகளில் தங்களது முன்னாள் கூட்டணி கட்சிகளை திமுகவினர் விமர்சித்து பேசி வருகின்றனர். இன்றைய திருமண நிகழ்ச்சியில் ஆ.ராசா தவெகவை விமர்சித்து பேச தொடங்கினார். அதிலும் முதல்வர் விஜய்யை மிகவும் கடுமையாக விமர்சித்து இருந்தார்.
மணமேடையில் பேசத் தொடங்கிய ஆ.ராசா "இந்த தலைவரை(ஸ்டாலின்) தேர்தலை வைத்து நீங்கள் எடை போடுவீர்களா? அண்ணன் முத்தரசன் இங்கே இருக்கிறார். அவரைக் கூறவில்லை. இன்னொரு கம்யூனிஸ்ட் கட்சி இருக்கிறது , அந்த கட்சித் தலைவர் திமுக கூட்டணியிலே இல்லை என்று கூறுகிறார். அவ்வாறு கூற அவருக்கு என்ன உரிமை இருக்கிறது? அது அதிக பிரசங்கித்தனம்.
எங்கள் கூட்டத்தில் 60 இயக்கங்கள் இருக்கிறது, அவர்கள் தினமும் முதல்வரை சந்தித்து பேசி வருகின்றனர். தயவு செய்து சீக்கிரம் அறிவியுங்கள் தலைவரே! திமுக யாருடன் கூட்டணியில் இல்லை என்று . 234 தொகுதிகளிலும் நாம் தனியாக நிற்போம் தலைவரே! யாரை நம்பியும் நாம் இல்லை , பெரியார், அண்ணா , கலைஞர் வடிவில் மொத்தமாக நீங்கள் இருக்கிறீர்கள். தயவு செய்து யாரிடமும் கூட்டணி இல்லை என்று அறிவித்து விடுங்கள் , என்று மேடையிலேயே கோரிக்கை வைத்தார்.
அதை தொடர்ந்து பேசிய திமுக தலைவர் ஸ்டாலின் " தமிழ்நாட்டில் உள்ள பிரச்சனைகளை எல்லாம் எடுத்துக் கூறி எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி சட்டமன்றத்தில் பேசியுள்ளார். அதற்கு முதலமைச்சர் என்ன பதில் கூறினார் தெரியுமா? "எங்கே உங்கள் அப்பாவை காணும்? எங்கே உங்கள் அப்பாவை காணும்?" என்று கூறி நக்கல் அடித்து இருக்கிறார்.
நீங்கள் அப்பாவை சட்டமன்றத்தில் தேடாதீர்கள். நீங்கள் தேடும் இடத்தில் நான் இல்லை.ஆனால், மக்கள் தேடுகிற இடத்தில் முதல் ஆளாக நான் இருக்கிறேன். மக்களின் மனதில் தேடுங்கள் நான் மக்களின் மனதில் இருக்கிறேன். திமுக துணை பொதுச் செயலாளர் ஆ ராசா கூட்டணி வேண்டாம் என்று கூறுகிறார். தனித்து போட்டியிடுமாறு கோரிக்கை வைக்கிறார்.
எப்போதுமே கலைஞர் கூட்டணியை பாதுகாப்பாக வைத்திருப்பார். அவர்களை எப்பொழுதும் தலைவர் வெளியே விட்டது கிடையாது, அவர்களாக போனால் நாம் எதுவும் செய்ய முடியாது. கலைஞரை பின்பற்றி தான் நான் கூட்டணி கட்சிகளிடம் நடந்து கொள்கிறேன். நாமாக அவர்களை வெளியேற்ற வில்லை , அவர்களாக வெளியேறும் போது நான் எதுவும் சொல்வதும் இல்லை. எல்லோரும் நமக்கு கூட்டணி தேவையில்லை என்று சொல்லிக் கொண்டிருக்கிறீர்கள். இதை நிச்சயமாக விரைவில் நாம் பரிசளிப்போம்என்று ஸ்டாலின் கூறினார்.
திமுகவில் கூட்டணி வேண்டாம் என்று குரல்கள் ஒலிக்க தொடங்கியுள்ள நிலையில், வரவுள்ள சட்டமன்ற இடைத்தேர்தலில் திமுக கூட்டணி இன்று களம் இறங்குமா? என்ற எதிர்பார்ப்பு கிளம்பி உள்ளது.