பாஜகவின் சித்தாந்தம் குறித்து தெரியாமல் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசி வருவதாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறி உள்ளார். இந்த 9 ஆண்டு கால ஆட்சியில் பாஜக அமைச்சர்கள் குண்டூசி திருடியது உண்டா? தமிழகத்தில் ஜனநாயகத்தை ஒரு கட்சி குழிதோண்டி புதைத்தது என்றால், அது தி.மு.க.தான் என ஸ்டாலினுக்கு சவால் விடுகிறார் பாஜக தலைவர் அண்ணாமலை.
சென்னை விமான நிலையத்தில் அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, பாஜக தலைவர் அண்ணாமலை , "முதலமைச்சர் ஏன் அவசரப்படுகிறார்? என தெரியவில்லை. காரணம், அவருக்கே பயம் வந்துள்ளது. அவரைத் தாண்டி அடுத்த திமுக தலைவராக சகோதரி கனிமொழி வருவதற்கு தயாராகி விட்டார். நான் முதலமைச்சருக்கு ஒரே ஒரு சவால் விடுக்கின்றேன்.
எங்கள் கட்சியில், அமித் ஷா சொன்னது போல், ஒரு பூத் தலைவரை கூட உயர்த்தி எந்த பதவியில் வேண்டுமானாலும் அமர வைப்போம். ஆனால், கோபாலபுரம் குடும்பத்தில் பிறந்தால் மட்டும் தான் உங்கள் கட்சியில் பொறுப்பு. தமிழகத்தில் ஜனநாயகத்தை ஒரு கட்சி குழிதோண்டி புதைத்தது என்றால், அது தி.மு.க.தான். இதற்கு முதலமைச்சர் வெட்கப்படவேண்டும்.
எங்கள் கட்சியின் சித்தாந்தம் பூத் மட்டத்தில் இருந்து மேலே வந்து கொண்டிருப்பார்கள். எனவே, முதலமைச்சர் பாஜக-வின் சித்தாந்தம் தெரியாமல் பேசுவது என்பது, அவருக்கு எந்த அளவுக்கு அரசியல் தெரியவில்லை என்பதை மட்டும் தான் காட்டுகிறது.
மத்தியில் 9 ஆண்டுகள் பாஜக ஆட்சி செய்து வருகிறது. இந்த 9 ஆண்டு கால ஆட்சியில் பாஜக அமைச்சர்கள் குண்டூசி திருடியது உண்டா? அந்த அளவுக்கு சரியாக இருந்தால், வயிறு எரியத்தானே செய்யும்? இரண்டரை ஆண்டு தமிழகத்தில் உள்ள திமுக ஆட்சி ஊழலுக்கு பெயர் வாங்கியிருக்கிறது. அதனால்தான் பால்வளத்துறை அமைச்சரை மாற்றினீர்கள். ஏன் மாற்றினீர்கள்? 9 ஆண்டுகளில் எங்களின் சாதனை மக்களுக்குத் தெரியும் என்றார் பிஜேபி தலைவர் அண்ணாமலை.