பலகாலம் பட்டினி – அரிசி திருடியதால் பழங்குடி இளைஞர் தாக்கப்பட்டு கொலை! குற்றவாளிகள் 14 பேர் – நீதிமன்றம் தீர்ப்பு!

பலகாலம் பட்டினி – அரிசி திருடியதால் பழங்குடி இளைஞர் தாக்கப்பட்டு கொலை!
குற்றவாளிகள் 14 பேர் – நீதிமன்றம் தீர்ப்பு!

ரிசி திருடியதாக அடித்துக் கொல்லப்பட்ட மது என்ற பழங்குடி இளைஞர் வழக்கில் 14 பேர் குற்றவாளிகள் என்று நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இவர்களுக்கு என்ன மாதிரியான தண்டனை வழங்கப்படும் என்ற விவரம் நாளை அறிவிக்கப்படும் என்றும் கூறியுள்ளது. 

கேரள மாநிலத்தைச் சேர்ந்த மது என்ற பழங்குடி இளைஞர் கடுகுமன்னா பழங்குடி கிராமத்தில் வசிக்கும் மல்லானின் மகன் அவர். 2018 ஆம் ஆண்டு அட்டப்பாடி என்ற இடத்தில், பலசரக்குக் கடையில் அரிசி திருடியதற்காக மதுவை அடித்து கொடுமைப்படுத்தி சித்திரவதை செய்துள்ளனர். அப்போது போலீசார் அவரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் சிகிச்சை பலனின்றி மது உயிரிழந்தார். 

அந்த அப்பாவி பழங்குடி இளைஞரை, அடித்து துன்புறுத்தும் காட்சிகளை செல்பி எடுத்து சமூக வலைதளங்களில் பகிர்ந்து மகிழ்ந்த அதிர்ச்சி சம்பவமும் நடந்தது. மருத்துவமனையில் மதுவின் உடலை பரிசோதித்த டாக்டர்கள், அவர் பலகாலமாக பட்டினியால் வாடிக் கொண்டிருந்ததாக தெரிவித்தனர். அவர் வயிற்றில் துளிகூட எந்த உணவுப் பொருட்களும் இல்லையாம். 

இந்த சம்பவம் சமூக வலைதளங்களில் தீயாய் பரவி ஒட்டுமொத்த நாட்டையும் வெட்கி தலைகுனிய வைத்தது. இது தொடர்பாக இந்த சம்பவத்தில் ஈடுபட்ட நபர்கள் மீது, வழக்கு பதிவு செய்யப்பட்டு, மன்னார்காடு சிறப்பு நீதிமன்றம் விசாரணை நடத்தி வந்தது. கடந்த 2018 ஆம் ஆண்டு இந்த வழக்கு தொடர்பாக 3000 பக்க குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது. மொத்தம் இதில் 16 பேர் மீது குற்றம் சாட்டி, ஆமை வேகத்தில் இந்த வழக்கு நடந்து கொண்டிருந்தது. இதை எதிர்த்து பல சமூக ஆர்வலர்களும் கேள்வி எழுப்பி வந்தனர். இதற்காக கோபிநாத் என்பவர் கேரளா அரசின் சிறப்பு வழக்கறிஞராக நியமிக்கப்பட்டிருந்தார். இவருக்காக எந்த வசதியும் செய்துத் தரப்படாத நிலையில், அவர் தன் பதவியையே ராஜினாமா செய்துவிட்டார். அதன் பின் அரசு வழக்கறிஞராக நியமிக்கப்பட்ட ரகுநாதன் என்பவர் நீதிமன்றத்தில் சரியாக ஆஜராவதில்லை என்ற குற்றச்சாட்டுகள் எழுந்தன. 

இறுதியாக இன்று இந்த வழக்கிற்கு தீர்ப்பளிக்கப்பட்டது.  பழங்குடி இளைஞர் மதுவை அடித்துத் துன்புறுத்தி கொலை செய்த 16 பேரில், 14 நபர்கள் குற்றவாளிகள் என நீதிமன்றம் தீர்ப்பளித்துவிட்டது. இந்த 14 பேருக்கான தண்டனை விவரங்கள் நாளை அறிவிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளனர்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com