இனியும் அமைதியாக இருந்தால் பலனில்லை - எடப்பாடி அதிரடி

இனியும் அமைதியாக இருந்தால் பலனில்லை - எடப்பாடி அதிரடி
Published on

இந்த ஆண்டுக்கான தமிழக சட்டப்பேரவை கூட்டம் இன்று (09.01.2023) காலை  10 மணிக்கு தொடங்கியது. நடப்பாண்டின் முதல் கூட்டம் என்பதால் ஆளுநர் ஆர்.என்.ரவியின் உரையுடன் கூட்டம் தொடங்கியது.

 இக்கூட்டத் தொடரில் எல்லோரும் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட விஷயம் சட்டசபைக்கு எடப்பாடி வருவாரா? மாட்டாரா? என்பதுதான்.

காரணம், கடந்த சட்டமன்ற கூட்டத்தொடரின் போது, ஓ.பன்னீர்செல்வத்தை அதிமுகவில் இருந்து நீக்கிவிட்டோம்.   எங்கள் அணியில் உள்ள ஆர்.பி.உதயகுமாரை எதிர்க்கட்சி துணைத் தலைவராக நியமித்திருக்கிறோம். இனி எதிர்கட்சித் துணைத்  தலைவர் ஆர்.பி.உதயகுமார்தான். எனவே இனிமேல் எதிர்கட்சித் துணைத்  தலைவர் இருக்கையில்  ஆர்.பி.உதயகுமார்தான் உட்கார வேண்டும். எனவே இருக்கை விஷயத்தில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சபாநாயகருக்கு  எடப்பாடி கடிதம் எழுதியிருந்தார்.

ஆனால் சபாநாயகர் இருக்கை விஷயத்தில் எந்த மாற்றம் செய்யவில்லை. இக்காரணத்தால் அந்த கூட்டத்தொடரில் எடப்பாடி பழனிசாமி தரப்பில் இருந்து யாரும் கலந்து கொள்ளவில்லை. 

இந்நிலையில் இந்த ஆண்டுக்கான சட்டமன்ற  கூட்டம் தொடங்குவதற்கு முன்பு சபாநாயகருக்கு ஈபிஎஸ் தரப்பு எதிர்க்கட்சித் துணைத் தலைவர் இருக்கை விஷயமாக மீண்டும் கடிதம் அளிக்கலாம் என எதிர்பார்க்கப்பட்டது.

இல்லையெனில் ஈபிஎஸ் தரப்பு கூட்டத்தொடரை புறக்கணிக்கும் எனவும் சொல்லப்பட்டது. ஆனால் யாரும் எதிர்பாராத வகையில் ஓபிஎஸ். வருவதற்கு முன்னதாகவே, ஈபிஎஸ் தரப்பு எம்.எல்.ஏக்கள் அனைவரும் சட்டப்பேரவைக்கு வந்து  இருக்கையில் அமர்ந்து கொண்டார்கள்.  அதன் பிறகு ஓ.பன்னீர்செல்வமும்,  வைத்திலிங்கமும் அவைக்கு வந்தார்கள்.

ஆளுநர் உரையை இருவரும் அருகருகே அமர்ந்தது அமைதியாக கவனித்தனர். முன்னதாக ஆளுநர் பேசத் தொடங்கியதும் திமுக கூட்டணி கட்சிகளான காங்கிரஸ், மதிமுக, விசிக, தமிழக வாழ்வுரிமை கட்சி உள்ளிட்டவை எதிர்ப்பு முழக்கங்கள் எழுப்பி அவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.

 அதிமுக கூட்டணியில் பாமக மட்டும் வெளியேறியதாக தெரிகிறது. ஆனால் அதிமுக தரப்பில் இருந்து எந்தவித எதிர்ப்பும், முழக்கமோ எழுப்பப்படவில்லை.

 ஆர்.பி.உதயகுமார் அவைக்கு வரும்போது அதிமுக எம்.எல்.ஏக்கள் சிறப்பான வரவேற்பு அளித்தனர். அவருக்கு எதிர்க்கட்சி துணைத் தலைவர் இருக்கை ஒதுக்கப்படாத காரணத்தால் வழக்கமாக அதிமுக எம்.எல்.ஏக்களுக்கு ஒதுக்கப்பட்ட இருக்கை வரிசையில் போய் அமர்ந்து கொண்டார்.

 கடந்த சில நாட்களுக்கு முன்பு தமிழக தேர்தல் ஆணையம் அனுப்பிய கடிதத்தில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் எனக் குறிப்பிடப் பட்டிருந்தது ஈபிஎஸ் தரப்பை கோபத்தில் ஆழ்த்தியது.

இந்த விஷயம் தொடர்பாக டெல்லியில் தனது அதிருப்தியை ஈபிஎஸ் வெளிப்படுத்தி இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. விரைவில் அடுத்தகட்ட அதிரடிக்கு ஈபிஎஸ் தரப்பு தயாராகும் எனக் கூறப்படுகிறது.

இனியும் அமைதியாக இருந்தால் பலனில்லை. சட்டப்பேரவையில் தனது இருப்பை உறுதி செய்ய வேண்டும். எனவேதான் ஈபிஎஸ் அவைக்கு வந்ததாக நம்பத் தகுந்த தகவல்கள் சொல்லுகின்றன.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com