ஸ்டெர்லைட் ஆலை: பராமரிப்பு பணிகளுக்கு ஆள் தேடும் வேதாந்தா நிறுவனம்!

ஸ்டெர்லைட் ஆலை: பராமரிப்பு பணிகளுக்கு ஆள் தேடும் வேதாந்தா நிறுவனம்!

கடந்த ஐந்தாண்டுகளாக மூடப்பட்டுள்ள தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் பராமரிப்பு பணிகளை மேற்கொள்வதற்கான ஆரம்ப கட்ட பணிகளை வேதாந்த நிறுவனம் ஆரம்பித்திருக்கிறது. பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள விருப்பமுள்ள நிறுவனங்களுக்கு டெண்டர் கோரியிருக்கிறது.

அனில் அகர்வாலின் வேதாந்தா நிறுவனத்திற்கு சொந்தமான ஸ்டெர்லைட் ஆலை தூத்துக்குடியில் செயல்பட்டு வந்தது. 2018ல் நடைபெற்ற மக்கள் போராட்டமும் நூறாவது நாளன்று நடந்த துப்பாக்கி சூட்டில் ஏற்பட்ட உயிரிழப்புகளை தொடர்ந்து ஆலை மூடப்பட்டிருக்கிறது. இந்நிலையில் ஐந்தாண்டுகளாக மூடப்பட்டுள்ள ஆலையில் பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள முன்வந்த வேதாந்த நிறுவனம், இது குறித்து உச்சநீதிமன்றத்தில் முறையீடு செய்திருக்கிறது.

உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கு, வரும் ஆகஸ்ட் மாதம் விசாரணைக்கு வரவிருக்கிறது. அந்நிலையில் உச்சநீதிமன்றத்தின் இறுதித் தீர்ப்பு, தனக்கு சாதகமாக இருக்கும் என்று வேதாந்தா நிறுவனம் எதிர்பார்த்திருக்கிறது. இறுதித் தீர்ப்புக்கு முன்னர் பராமரிப்பு பணிகளை மேற்கொள்வதற்கான ஆட்களை தயார் செய்யும் பணிகளில் இறங்கியிருக்கிறது.

ஸ்டெர்லைட் ஆலையில் பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள விருப்பமுள்ள நிறுவனங்களிடமிருந்து டெண்டர் கோரியிருக்கிறது. பராமரிப்பு பணிகளை மேற்கொள்வதில் உதவி செய்யக்கூடிய நிறுவனங்களிடமிருந்து டெண்டர் கோரி, விளம்பரம் வெளியிட்டிருக்கிறது. விருப்பமுள்ள நிறுவனங்கள் வேதாந்தா நிறுவனத்தை நேரிடையாக அணுகலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

பராமரிப்பு பணியை மேற்கொள்ள விரும்பும் நிறுவனங்கள் 4 ஆயிரம் ஊழியர்களை கொண்டிருக்க வேண்டும். தூத்துக்குடியை சேர்ந்ததாக இருக்கவேண்டும். பாதுகாப்பு வசதிகள் சரியாக இருக்கிறதா என்பது தொடங்கி, பராமரிப்பு பணிகள், பிளாண்டை பழுது பார்ப்பது உள்ளிட்ட பல்வேறு பணிகளை செய்ய வேண்டியிருக்கும்.

உச்சநீதிமன்றத்தின் வழிகாட்டுதலை தொடர்ந்து ஒரு சில பராமரிப்பு பணிகளை மேற்கொள்வதற்கு மாவட்ட நிர்வாகம் ஸ்டெர்லைட் காப்பர் நிறுவனத்திற்கு ஏற்கனவே அனுமதி தந்திருக்கிறது. மூடப்பட்ட பிளாண்ட்டில் பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள கடந்த ஏப்ரல் மாதம் 10 ஆம் தேதி உச்சநீதிமன்றம் அனுமதி தந்தாலும், மாவட்ட நிர்வாகத்தின் அனுமதிக்காக காத்திருக்க வேண்டியிருந்தது.

2018 மே மாதம் நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டிற்கு பின்னர் காப்பர் பிளாண்ட் தொடர்ந்து மூடப்பட்டுள்ளது. இதன் மூலமாக இந்தியாவின் காப்பர் உற்பத்தியில் 40 சதவீதம் இழப்பு ஏற்பட்டு வருவதாக சொல்லப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டு முதல் ஸ்டெர்லைட் ஆலையை விற்பதற்கு வேதாந்தா நிறுவனம் கடும் முயற்சி எடுத்து வருவதாக சொல்லப்பட்டு வருகிறது.

இந்நிலையில் திடீர் திருப்பமாக ஸ்டெர்லைட் ஆலையை விற்கும் முயற்சி கைவிடப்பட்டிருப்பதாக தெரிகிறது. உச்சநீதிமன்றத்தில் தனக்கு சாதகமான தீர்ப்பு வந்தால் உடனடியாக ஆலையை திறந்து, தொடர்ந்து முன்னின்று இயக்குவதற்கும் தயாராகவே இருக்கிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com