திருடிய கோயில் நகைகளை அபராதம், நன்கொடையோடு திருப்பிக் கொடுத்த ஆசாமி!

திருடிய கோயில் நகைகளை அபராதம், நன்கொடையோடு திருப்பிக் கொடுத்த ஆசாமி!

டிசா மாநிலம், புவனேஸ்வர் புறநகர் பகுதியான கோபிநாத்பூரில் உள்ள ஒரு கிருஷ்ணன் கோயிலில் ஸ்வாமிக்குச் சொந்தமான வெள்ளி ஆபரணங்கள் 2014ம் ஆண்டு திடீரென காணாமல் போய்விட்டது. இது குறித்து அந்த ஊர் காவல் நிலையத்திலும் புகார் செய்யப்பட்டது. அந்தப் புகாரின் அடிப்படையில் லிங்கராஜ் காவல்நிலைய போலீசார், கிராம மக்கள் மற்றும் யாகம் நடத்த வந்த பூசாரிகள் உள்பட அனைவரையும் விசாரணைக்கு உட்படுத்தினர். ஆனால், இந்த விசாரணையில் திருடுப்போன நகைகள் குறித்து எதுவும் துப்பு துலங்காமல் இருந்து வந்தது. இதனால் திருடுப்போன நகைகள் கிடைக்காது என்று கோயில் பூசாரிகள் மற்றும் அக்கிராம மக்கள் அதனை மறந்துவிட்டனர்.

இந்த நிலையில், ஒன்பது வருடங்களுக்குப் பிறகு காணாமல் போன கோயில் வெள்ளி நகைகள் திரும்பக் கிடைத்துள்ளது. இதில் ஆச்சரியம் என்னவெனில், கோயில் நகைகளை திருடிய நபர் கோயிலை ஒட்டிய தேபேஷ் குமார் மொஹன்ட்டி என்பரின் வீட்டின் வெளியே மன்னிப்பு கடிதம் ஒன்றையும், திருடிய நகைகளையும், கூடவே 301 ரூபாயையும் வைத்துவிட்டுச் சென்று இருக்கிறார்.

அந்த மன்னிப்புக் கடிதத்தில், “கோயிலில் யாகம் நடந்துக்கொண்டிருந்தபோது, கோயில் நகைகளை திருடினேன். நகைகளைத் திருடியதிலிருந்து இந்த ஒன்பது ஆண்டுகளில் வாழ்க்கையில் நிறைய பிரச்னைகளை சந்தித்துவிட்டேன். அதனால், கடவுள் முன்னர் சரணடைந்து திருடிய நகைகளை ஒப்படைத்துவிடலாம் என்று முடிவு செய்தேன். எனது பெயர், முகவரி, கிராமம் எதனையும் நான் இதில் குறிப்பிடவில்லை. மேலும், கோயில் நகைகளைத் திருடிய குற்றத்துக்காக அபராதமாக100 ரூபாயும், கோயிலுக்கு நன்கொடையாக 201 ரூபாயும் விட்டுச் செல்கிறேன்” என்று அவர் அந்தக் கடிதத்தில் குறிப்பிட்டு இருக்கிறார். கிருஷ்ணா, ராதையின் தலைக் கிரீடங்கள், காதணிகள், வங்கிகள் மற்றும் ஒரு புல்லாங்குழல் என அந்த நகைகளின் மதிப்பு 4 லட்சம் ரூபாய் மதிப்பு இருக்கும் என்று கூறப்படுகிறது.

திருடுபோன நகைகள் திரும்பக் கிடைத்தது குறித்து கோயில் பூசாரி கைலாஷ் பாண்டா, "காவல்துறையினர் திருடப்பட்ட நகைகளை மீட்காத நிலையில், அனைத்து நம்பிக்கைகளையும் இத்தனை வருடங்களாக கைவிட்டுவிட்டோம். ஆனாலும், கடும் சிரமங்களுக்கு மத்தியில், ஸ்வாமிக்கு புதிய ஆபரணங்களை நாங்கள் வாங்கினோம். கடவுள், திருடனை தண்டித்துவிட்டதால், அவரே நகைகளை கொண்டுவந்து திரும்ப ஒப்படைத்துவிட்டார்" என்று தெரிவித்து இருக்கிறார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com