கேரளாவில் திருநாவாய் மற்றும் திரூர் இடையே சென்று கொண்டிருந்த வந்தே பாரத் ரயில் மீது கல் வீசப்பட்டது. இதில் ரயிலின் c4 பெட்டியிலுள்ள கண்ணாடிகள் உடைந்து சேதமடைந்தது.
வந்தே பாரத் ரயிலானது நாடு முழுவதும் பல்வேறு நகரங்களை இணைக்கும் வகையில் அறிமுகம் செய்யப்பட்டு வருகிறது. தமிழகத்தில் சென்னை - கோவை மற்றும் சென்னை - மைசூர் வழித்தடத்தில் வந்தே பாரத் ரயில் இயக்கப்படுகிறது. ஏப்ரல் 25ஆம் தேதி நாட்டின் 15 வது வந்தே பாரத் ரயிலானது திருவனந்தபுரம் - காசக்கோடு இடையே தன் சேவையைத் துவங்கியது. இதுதான் கேரளாவின் முதல் வந்தே பாரத் ரயில் என்பதால் மக்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. தொடக்கத்திலிருந்தே இந்த ரயிலில் மக்கள் ஆர்வத்துடன் பயணித்து வருகின்றனர்.
இந்நிலையில் நேற்று (01-05-2023) திருநாவாய் - திரூர் இடையே இந்த ரயில் இயக்கப்பட்டபோது, அதன் மீது யாரோ கற்களை வீசினர் . இதில் வந்தே பாரத் ரயிலின் c4 பெட்டியின் கண்ணாடி உடைந்து நொறுங்கியது. இந்த சம்பவத்தில் பயணிகள் யாருக்கும் அதிர்ஷ்டவசமாக காயம் ஏற்படவில்லை.
பின்னர் இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த போலீசார் கல்வீசிய நபர்கள் யார் என்று தேடி வருகின்றனர். மேலும் வந்தே பாரத் ரயிலுக்கு பாதுகாப்பை அதிகரிக்கவும் முடிவு செய்திருக்கிறார்கள். கேரளாவின் காங்கிரஸ் கட்சி தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணியானது திரூர் ரயில் நிலையத்தில் வந்தே பாரத் ரயில் நின்று செல்ல வேண்டும் எனக் கூறி, போராட்டம் நடந்தபோது தான் இந்த கல்விச்சு சம்பவமும் ஏற்பட்டுள்ளது.
கேரளாவில் வந்தே பாரத் ரயில் மீது கல்வீச்சு நடத்தப்பட்ட சம்பவம் கண்டனத்திற்குரியது என கேரள பாஜக தலைவர் சுரேந்திரன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் இந்த செய்தியைப் பகிர்ந்துள்ளார். இந்த சம்பவமானது கேரளாவுக்கே அவமானத்தை ஏற்படுத்தக் கூடியதாகும். வந்தே பாரத் ரயில் தொடங்கிய நாள் முதலே இதற்கு பலர் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். போலீசாரும் குற்றவாளிகளை கண்டறிய உரிய நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
வந்தே பாரத் ரயில் மீது இவ்வாறான தாக்குதல் இது முதல் முறையல்ல. கடந்த மூன்று மாதங்களில் மூன்றாவது முறையாக வந்தே பாரத் ரயில் மீது கல்வீச்சு சம்பவம் நடந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.