

தெலுங்கானாவில் கிராமவாசிகளுக்கு அளித்த தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்காக, தெரு நாய்கள் கொடூரமான முறையில் படுகொலை செய்யப்படும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. ஜெக்தியால் மாவட்டம், பெகதபள்ளி கிராமத்தில் கடந்த 22-ஆம் தேதியன்று 300 தெரு நாய்களுக்கு விஷ ஊசி போடப்பட்டுக் கொல்லப்பட்டுள்ளன. இந்தச் செயலுக்காகக் கிராமத் தலைவர் மற்றும் கிராம பஞ்சாயத்து செயலாளர் ஆகிய இருவர் மீதும் போலீசில் புகார் அளிக்கப்பட்டு, எஃப்.ஐ.ஆர். (FIR) பதிவு செய்யப்பட்டுள்ளது. நாய்களைக் கொல்வதற்காகப் பஞ்சாயத்துத் தலைவர் சிலருக்குப் பணம் கொடுத்ததாகப் புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விலங்கு நல ஆர்வலர்கள் அளித்துள்ள அதிர்ச்சி தகவலின்படி, இதுவரை தெலுங்கானாவில் மட்டும் சுமார் 900 தெரு நாய்கள் கொல்லப்பட்டுள்ளன. புதைக்கப்பட்ட இடத்திலிருந்து 70 முதல் 80 நாய்களின் உடல்கள் தோண்டி எடுக்கப்பட்டுள்ளன. இவை மூன்று அல்லது நான்கு நாட்களுக்கு முன்பு புதைக்கப்பட்டிருக்கலாம் எனத் தெரிகிறது. பிரேதப் பரிசோதனை அறிக்கையின் அடிப்படையில் அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல் ஆய்வாளர் கிரண் தெரிவித்துள்ளார்.
ஜனவரி மாதத் தொடக்கத்தில் ஷியாம்பேட்டை மற்றும் ஆரேபள்ளி கிராமங்களில் 300 தெரு நாய்கள் கொல்லப்பட்ட சம்பவத்தில், இரண்டு பஞ்சாயத்துத் தலைவிகள் மற்றும் அவர்களின் கணவர்கள் உட்பட 9 பேர் மீது ஹனம்கொண்டா மாவட்ட போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். அதேபோன்று, கடந்த 19-ஆம் தேதி யச்சாரம் கிராமத்தில் 100 நாய்களுக்கும், காமரெட்டி மாவட்டத்தில் 200 நாய்களுக்கும் விஷ ஊசி போட்டுப் படுகொலை செய்துள்ளனர்.
காமரெட்டி சம்பவத்தில் 5 பஞ்சாயத்துத் தலைவர்கள் உட்பட 6 பேர் மீது வழக்கு பாய்ந்துள்ளது. தெலுங்கானாவில் இது போன்ற கொடூரங்கள் கடந்த சில ஆண்டுகளாகவே தொடர்ந்து வருகின்றன. கடந்த ஆண்டு டிசம்பரில் அளிக்கப்பட்ட தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றுவதாகக் கூறி, சுமார் 900 நாய்கள் விஷ ஊசி மூலம் கொல்லப்பட்டுள்ள தகவல் விலங்கு நல ஆர்வலர்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.