தமிழக அரசு ஊழியர்களின் முக்கியமான கோரிக்கையான பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தக்கோரி நேற்று அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது. அடுத்த கட்டமாக வரும் 24ம் தேதியன்று 20,000 கிலோ மீட்டர் மனிதச்சங்கிலி போராட்டம் நடத்தப்படும் என்றும் ஜாக்டோ ஜியோ அறிவித்துள்ளது.
2003-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 1-ந் தேதிக்கு பிறகு அரசு பணியில் சேர்ந்தவர்களுக்கு தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் பங்களிப்புடன் கூடிய ஓய்வூதிய திட்டத்தை கைவிட்டு, பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பது தமிழக அரசு ஊழியர்களின் நீண்ட நாளைய கோரிக்கை.
தி.மு.கவின் தேர்தல் அறிக்கையில் பழைய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது. ஆனால், பின்னாளில் தமிழக நிதியமைச்சர் பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் நடைமுறைப்படுத்துவதில் ஏராளமான சிக்கல்கள் இருப்பதாக தெரிவித்திருந்தார். பட்ஜெட்டில் இது குறித்து மேலதிக விபரங்கள் இடம்பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் ஓய்வூதிய திட்டம் உள்ளிட்ட 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகத்தின் அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்பினர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர். தமிழக அரசின் பல்வேறு துறைகளில் 30 சதவீதத்திற்கு மேல் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேண்டும். உள்ளாட்சி அமைப்புகளிலும், பல்வேறு அரசுத் துறைகளிலும் தனியார் முகமை மூலம் பணியாளர்களை நியமனம் செய்வதை தடை செய்ய வேண்டும்.
இடைநிலை, உயர்நிலைப்பள்ளி தலைமையாசிரியர், உடற்கல்வி இயக்குனர் ஆகியவர்களுக்கு மத்திய அரசு ஊழியருக்கு இணையான ஊதியம் வழங்கவேண்டும். காலவரையின்றி முடக்கி வைக்கப்பட்டுள்ள சரண் விடுப்பு ஒப்படைப்பு, உயர்கல்விக்கான ஊக்க ஊதிய உயர்வு ஆகியவற்றை உடனடியாக வழங்க வேண்டும்.
சாலைப்பணியாளர்களின் 41 மாத பணி நீக்கக் காலத்தை முறைப்படுத்த வேண்டும். அனைத்து பள்ளி, கல்லூரிகளிலும் ஆசிரியர்களை, ஆசிரியர் தேர்வு வாரியத்தின் மூலம் மட்டுமே பணி அமர்த்த வேண்டும் என்பது உள்ளிட்ட 15 கோரிக்கைகளை தொடர்ந்து முன்வைத்து போராட்டம் தொடர்கிறது.
தி.மு.க ஆட்சிக்கு வரும்போதெல்லாம் அரசு ஊழியர்களுக்கு சாதமான சூழல்தான் இதுவரை இருந்து வந்திருக்கிறது. கலைஞர் முதல்வராக இருந்த காலங்களில் அரசு ஊழியர்களின் கோரிக்கைகள் உடனடியாக நிறைவேற்றப்பட்டன அல்லது நிறைவேற்றும்படியான உத்திரவாதம் தரப்பட்டது. ஆனால், தற்போதைய தி.மு.க ஆட்சியில் அரசு ஊழியர்களின் போராட்டங்கள் அலட்சியப்படுத்தப்பட்டு வருகின்றன என்கிறார்கள், ஓய்வுபெற்ற அரசு ஊழியர்கள்.