ஆதார் இணைப்பிற்கு கட்டணம் வசூலித்தால் கடும் நடவடிக்கை! மின் வாரியம் எச்சரிக்கை !

EB
EB

மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணிக்கு பொது மக்களிடம் பணம் வசூலித்தால், கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகளுக்கு தமிழ்நாடு மின்சார வாரியம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

தமிழ்நாட்டில் மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்க சிறப்பு முகாம் நடைபெறுகிறது . தமிழ் நாட்டில் மின் இணைப்புடன், ஆதார் எண்ணையும் இணைப்பது தற்போது கட்டாயமாக்கப் பட்டுள்ளது. தமிழ்நாடு முழுவதும் 2 கோடியே 30 லட்சம் வீட்டு மின் இணைப்புகள் பயன்பாட்டில் உள்ளன. இது தவிர 22 லட்சம் விவசாய மின் இணைப்புகளும், 11 லட்சம் குடிசை மின் இணைப்புகளும் உள்ளன. இந்நிலையில் மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணையும் சேர்த்து இணைத்தால் தான், மின்சார கட்டணம் கட்ட முடியும் என்ற அறிவிப்பு வெளியானது. எனவே, மின் இணைப்புடன், ஆதார் எண்ணையும் இணைக்கும் பணியில் பொதுமக்கள் ஈடுபட்டு வருகிறார்கள்.

Aadhar card
Aadhar card

இது தொடர்பாக அனைத்து மண்டல பொறியாளர்களுக்கும் சுற்றறிக்கையும் அனுப்பப்பட்டுள்ளது. அதில், மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கான சிறப்பு முகாம்களுக்கு வரும் முதியவர்கள், மாற்றுத் திறனாளிகளுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இணைப்பு பணி நடைபெறும் போது கணினியில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டால் மாற்றுக் கணினிகளை தயாராக வைத்திருக்க வேண்டும். காலை 10.30 மணி முதல் மாலை 5.15 வரை நடைபெறும் முகாம்களில் மின்வாரிய அதிகாரிகள் உணவு இடைவேளை, தேநீர் இடைவேளை இல்லாமல் பணியாற்ற வேண்டும் என்றும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்கும் அவசியம் குறித்த விவரங்கள் பிளக்ஸ் போர்டுகள் மூலமாக மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும். இணைப்பு பணியை மேற்கொள்வதற்காக நுகர்வோர்களிடம் பணம் வசூலித்ததாக புகார் வந்தால் அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு மின்சார வாரியத்தின் அதிகாரப்பூர்வ இணையதளமானhttp://www.tangedco.gov.in அல்லது https://adhar.tnebltd.org/adharupload என்ற இணையதளத்தில் இணைப்பு பணியை மேற்கொள்ளலாம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com