டேராடூனில் உள்ள பள்ளி ஒன்றில் பிரதமர் மோடியின் 100 வது 'மன் கி பாத்' நிகழ்ச்சியைக் கேட்க பள்ளிக்கு வராத மாணவர்களுக்கு ரூ.100 அபராதம்! விதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
பள்ளியின் வாட்ஸ்அப் குழுவில் மாணவர்களுக்கு அபராதம் விதித்து நிர்வாகம் உத்தரவு பிறப்பித்ததைத் தொடர்ந்து இந்த விவகாரம் இப்போது சர்ச்சையாகி உள்ளது.
பெற்றோர் மற்றும் மாணவர் உரிமைகளுக்கான தேசிய சங்கத்தின் தலைவர் ஆரிப் கான், இந்த விவகாரத்தில் நடவடிக்கை எடுக்கக் கோரி டேராடூன் முதன்மை கல்வி அதிகாரிக்கு கடிதம் எழுதியுள்ளார்.
பள்ளியின் மீதான புகாருக்கு எதிர்வினையாக கல்வித்துறை நோட்டீஸ் அனுப்பி 3 நாட்களுக்குள் பதில் அளிக்க வேண்டும் என பள்ளி நிர்வாகத்திற்கு உத்தரவிட்டுள்ளது.
இந்நிலையில் மாணவர் உரிமைகளுக்கான தேசிய சங்கத்தின் தலைவர் ஆரிப் கான் ஊடகங்களிடம் கூறியதாவது;
ஞாயிற்றுக்கிழமை “மன் கி பாத்” நிகழ்ச்சிக்காக பள்ளிக்கு வராத குழந்தைகளுக்கு ரூ. 100 அபராதம் விதித்திருக்கிறது. அபராதம் கட்டாதவர்கள், தங்களுக்கு உடல்நலக் கோளாறு என்று காரணம் காட்டினால் அதற்கான மருத்துவச் சான்றிதழை சமர்ப்பிக்க டேராடூனின் ஜிஆர்டி நிரஞ்சன்பூர் அகாடமி உத்தரவு பிறப்பித்துள்ளது.”
-எனத் தெரிவித்தார்.
இது குறித்து முதன்மை கல்வி அலுவலர் பிரதீப்குமார் கூறியதாவது: காரணம் கேட்டுப் பள்ளிக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. நோட்டிஸ் பெற்ற மூன்று நாட்களுக்குள் பள்ளி தரப்பில் ஆஜராகவில்லை என்றால், பள்ளி சார்பில் மாணவர்களிடம் பணம் கேட்டதை ஊர்ஜிதமாக்கி அவர்கள் மீது துறை நடவடிக்கை எடுக்கப்படும்,'' - என்றார்.
பிரதமர் நரேந்திர மோடியின் மாதாந்திர வானொலி நிகழ்ச்சியான 'மன் கி பாத்' ஏப்ரல் 30 ஆம் தேதி 100 எபிசோட்களை நிறைவு செய்தது.
100வது எபிசோடாக, நாடு முழுவதும் உள்ள பள்ளிகள் உட்பட பல இடங்களில் சிறப்பு நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.