meta property="og:ttl" content="2419200" />

அதிகாலையில் அரைதூக்கத்தில் பள்ளிக்குச் செல்லும் மாணவர்கள் - இந்தோனேசியாவில் புதிய சட்டம்!

அதிகாலையில் அரைதூக்கத்தில் பள்ளிக்குச் செல்லும் மாணவர்கள் - இந்தோனேசியாவில் புதிய சட்டம்!
Published on

இந்தோனேசியா நாட்டில், கிழக்கு நுஸா டெங்கரா மாகாண தலைநகர் குபாங்கில் உள்ள பத்துக்கும் மேலான உயர்நிலைப் பள்ளிகளில் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு காலை 5.30 மணிக்கே வகுப்புகள் தொடங்கிவிடுகின்றன.

பள்ளி மாணவர்களிடம் ஒழுங்கை ஏற்படுத்தும் நோக்கிலும், கல்வித்தரத்தை மேம்படுத்தும் நோக்கிலும் பரிசோதனை முறையில் காலை 5.30 மணிக்கே வகுப்புகளைத் தொடங்க கவர்னர் விக்டர் லாஸ்கோதத் உத்தரவிட்டுள்ளார்.

வழக்கமாக இந்தோனேசியாவில் பள்ளிகள் காலை 7 மணியிலிருந்து 8 மணிக்குள் செயல்படத் தொடங்கும். இப்போது காலை 5.30 மணிக்கே வகுப்புகள் தொடங்கப்படுவதால் உயர்நிலைப் பள்ளி மாணவர்கள் அரைத்தூக்கத்தில் பள்ளிக்கு புறப்பட்டு செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

காலை 5.30 மணிக்கே வகுப்புகள் தொடங்குவதால் ஒவ்வொரு நாளும் மாணவர்கள் 4 மணிக்கே எழுந்து, தங்களது காலைக்கடன்களை முடித்துக் கொண்டு உணவு சாப்பிட்டு, சீருடை அணிந்து அரைகுறை தூக்கத்தில் புத்தக மூட்டையை எடுத்துக் கொண்டு பள்ளி செல்கின்றனர். சிலர் நடந்து செல்கின்றனர். வேறு சிலர் குறித்த நேரத்தில் பள்ளி செல்வதற்காக மோட்டார் சைக்கிள் டாக்ஸிக்காக காத்திருக்கின்றனர்.

குழந்தைகளை அதிகாலையில் எழுப்பி பள்ளிக்குச் செல்ல தயார் படுத்துவது மிகவும் கஷ்டமாக உள்ளது. அரைகுறை தூக்கத்தில் பள்ளி செல்லும் அவர்கள் பள்ளியில் படித்து விட்டு வீடுதிரும்பும்போது சோர்ந்துபோய் விடுகின்றனர். இந்த புதிய திட்டத்தை எங்களால் ஏற்றுக்கொள்ள முடியாது என்கின்றனர் பெற்றோர்கள்.

அதிகாலை எழுந்து பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு பாதுகாப்பும் இல்லை என்கிறார் யுரேகா என்ற பெயருடைய 16 வயது மாணவியின் தாயாரான் ராம்பு அடா. என் மகள் பள்ளிக்குச் செல்ல காலை 4 மணிக்கே எழுந்திருக்க வேண்டியுள்ளது. பின்னர் மோட்டார் சைக்கிள் டாக்ஸியில் பள்ளி செல்கிறாள். வீடு திரும்பும் அவள் மிகவும் சோர்ந்து காணப்படுகிறாள். நேராக படுக்கச் சென்றுவிடுகிறாள் என்கிறார் அடா.

இதனால் எல்லாம் கல்வியின் தரத்தை உயர்த்திவிடமுடியாது. கல்வித்தரத்தை உயர்த்துவதற்கும் அதிகாலையில் வகுப்புகளை தொடங்குவதற்கும் சம்பந்தமே இல்லை என்கிறார் நுஸா சென்டனா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த கல்வியாளரான மார்செல் ரோபாட்.

இந்த நிலை தொடருமானால் குழந்தைகளின் தூக்கம் பாதிக்கப்பட்டு அவர்களின் உடல்நிலை மோசமாவதுடன், நடத்தையிலும் மாற்றம் ஏற்பட்டுவிடும் என்கிறார் அவர்.

குழந்தைகள் தூங்குவதே கொஞ்ச நேரம்தான். அவர்களை ஏன் அரைகுறை தூக்கத்தில் எழுப்பவேண்டும். இதனால் அவர்கள் உடல்நிலை பாதிக்கப்படும். இதனால் மன அழுத்தம் ஏற்பட்டு விபரீத விளைவுகள் ஏற்படும் வாய்ப்புள்ளது என்கிறார் மற்றொரு நிபுணர்.

குழந்தைகளுக்கு போதுமான தூக்கம் வேண்டும். நடுநிலை மற்றும் உயர்நிலைப் பள்ளிகளை காலை 8 மணி அல்லது அதற்கு மேல் தொடங்குவதில் எந்த பிரச்னையும் இல்லை என்கிறது அமெரிக்க அகாதெமி 2014 ஆம் ஆண்டில் வெளியிட்டுள்ள ஆய்வு அறிக்கை.

குபாங்கில் பள்ளிகளை காலை 5.30 மணிக்கே தொடங்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்து உள்ளூர் எம்.பி.க்கள் வழக்கு தொடுத்துள்ளனர். எந்த அடிப்படையும் இல்லாத இந்த உத்தரவை அரசு திரும்ப பெற வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

ஆனால், கடும் விமர்சனங்கள் எழுந்த போதிலும் இந்த பரிசோதனை நடவடிக்கையிலிருந்து அரசு பின்வாங்கவில்லை. அரசு ஊழியர்களும் காலை 5.30 மணிக்கே பணிக்கு வரவேண்டும் என்று கூறியுள்ளது.

பெற்றோர்களிடையே இதற்கு எதிர்ப்பு இருந்தாலும் பணிக்குச் செல்வோர் இதை வரவேற்கின்றனர். ரென்சி சிசிலா பெகோகில்லா என்ற பெண், அதிகாலையில் எழுந்து பணிக்குச் செல்வதால் சுறுசுறுப்பாக உள்ளது. ஒரு காலத்தில் தூங்கிய நான், இப்போது அலுவலகத்தில் நேரம் கிடைக்கும்போது உடற்பயிற்சி செய்வதால் சுறுசுறுப்பாகவும் உடல்நலத்துடனும் இருக்கிறேன் என்கிறார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com