சாலையில் சாகசத்தில் ஈடுபட்ட நபரின் சூப்பர் பைக்கை சட்னி போல அரைத்து கையில் கொடுத்த காணொளி தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. மெஷினில் போட்டு மாவு போல அரைக்கப்பட்ட பைக்கின் மதிப்பு பல லட்சம் இருக்கும் எனக் கூறப்படுகிறது.
சில மாதங்களுக்கு முன்புதான் டிடிஎஃப் வாசனின் சூப்பர் பைக் விபத்துக்குள்ளான வீடியோ வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்தியாவில் இவரைப் போன்று பலரும் சூப்பர் பைக்கை வைத்துக் கொண்டு வீர சாகசத்தில் ஈடுபடுகின்றனர். ஆனால் இது இந்தியாவில் மட்டும்தான் நடக்கிறது என நினைக்க வேண்டாம். உலகம் முழுவதும் இவரைப் போலவே வீர சாகசத்தில் ஈடுபடுவோர் இருக்கிறார்கள். காவல்துறையும் இவர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். அப்படிப்பட்ட சம்பவம் தான் கத்தாரில் நடந்துள்ளது.
கத்தார் நாட்டில் பொதுவெளியில் வீர சாகசத்தில் ஈடுபட்ட நபரின் சூப்பர் பைக்கை, இயந்திரத்தில் போட்டு அரைத்துள்ளது கத்தார் அரசாங்கம். அவர் பொதுவெளியில் ஸ்டண்ட் செய்ததற்காக இந்த தண்டனை வழங்கப்பட்டுள்ளது. இப்படி ஸ்டண்ட் செய்யும் நபர்கள் அமைதியாக இருப்பதில்லை. அதை காணொளியாக படம் பிடித்து இணையத்தில் லைக்கு ஆசைப்பட்டு வெளியிடுகின்றனர். ஆனால் அந்த காணொளியே அவர்களுக்கு பெரும் சிக்கலை ஏற்படுத்தி விடுகிறது.
இப்படிதான் கத்தார் நாட்டைச் சேர்ந்த ஒருவர் சூப்பர் பைக்கை வைத்து வீர சாகசம் மேற்கொண்டு அதை காணொளியாக இணையத்தில் பதிவேற்றினார். அந்த வீடியோ இணையத்தில் வேகமாக பரவி கத்தார் போலீசார் கண்ணிலும் சிக்கிக்கொண்டது. உடனடியாக கத்தார் உள்துறை அமைச்சகம் அந்த பைக்கை பறிமுதல் செய்து, பொதுவெளியிலேயே வைத்து பைக்கை மெஷினில் போட்டு மாவாக அரைத்து ஸ்கிராப் செய்தனர். மக்களுக்கு ஆபத்து விளைவிக்கும் விதமாக வாகனம் ஓட்டியதாகக் கூறி உரிமையாளர் மீதும் நடவடிக்கை எடுத்துள்ளது கத்தார் காவல்துறை.
இனி வேறு யாரும் இத்தகைய செயலில் ஈடுபடக்கூடாது என்பதற்காகவே கத்தார் காவல்துறையினர் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளனர். இருப்பினும் யாருக்கும் பாதகம் விளைவிக்காத இந்த செயலுக்கு பல லட்சம் (19 லட்சம்) மதிப்புள்ள விலையுயர்ந்த பைக்கை இப்படி செய்ததைப் பார்த்து இரு சக்கர வாகன விரும்பிகளின் கண்ணீர் வடிக்கின்றனர்.