சென்னை கடற்கரை முதல் செங்கல்பட்டு வரையிலான புறநகர் மின்சார ரயில் சேவை ரயில் பெட்டிகள் நடுவழியில் கழன்றதால் பாதிக்கப்பட்டுள்ளது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் ஆயிரக்கணக்கான மக்கள் இந்த புறநகர் மின்சார ரயில் சேவையை நம்பி தான் வேலைக்கு சென்று வருகின்றனர். இன்று காலை சென்னை கடற்கரை – செங்கல்பட்டு வழித்தடத்தில் வந்து கொண்டிருந்த மின்சார ரயிலில் சைதாப் பேட்டை அருகே வந்த போது பெட்டிகள் கழன்றதன் காரணமாக புறநகர் மின்சார ரயில் சேவை பாதிக்கப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதனால் இந்த வழித்தடத்தில் 20 நிமிடங்களுக்கு மேலாக ரயில்கள் வராததால் பொதுமக்கள் அவதிக்குள்ளாயினர். இதனால் சென்னை கடற்கரை முதல் செங்கல்பட்டு வரையிலான புறநகர் மின்சார ரயில் 2வது வழித்தடத்தில் ரயில் சேவை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்த வழித்தடம் நீண்ட நேரம் சரிசெய்யப்படாமல் இருப்பதால் கோடம்பாக்கம் , கிண்டி , பல்லாவரம் , தாம்பரம் , பெருங்களத்தூர் என பல்வேறு ரயில் நிலையங்களில் பொதுமக்கள் காத்திருந்தனர். மறு மார்க்கத்தில் செங்கல்பட்டு முதல் கடற்கரை வரை செல்லும் மின்சார ரயில்கள் வழக்கம்போல் இயக்கப்படுகின்றன.
12 பெட்டிகள் கொண்ட மின்சார ரயிலில் இருந்து 4 பெட்டிகள் இணைக்கும் பகுதி கழன்றதால் 5:30 மணி அளவில் சைதாப்பேட்டை ரயில் நிலையத்தில் ரயில் நிறுத்தி வைக்கப்பட்டது. இதனையடுத்து ரயிலை சரி செய்ய தாம்பரம் ரயில் நிலையத்திற்கு கொண்டு சென்றுள்ளனர். இதனால் பராமரிப்பு பணிகளுக்காக சென்னை கடற்கரை – தாம்பரம்- செங்கல்பட்டு ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
இதற்கான மாற்று ஏற்பாடாக காத்திருக்கும் பயணிகள் பாண்டிச்சேரி செல்லும் விரைவு ரயிலில் ஏறி செல்லலாம் என்றும் அது அனைத்து நடைமேடையில் நின்று செல்லும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது போல் நான்காம் நடைமேடையில் இயங்கும் விரைவு ரயில்கள் அனைத்து நடைமேடையில் நின்று செல்லும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது மாற்று ரயில் பாதையான நான்காம் நடை பாதையில் கடற்கரை – தாம்பரம்- செங்கல்பட்டு ரயில் சேவை காலதாமதமாக இயக்கப்படுவதாக ரயில்வே நிர்வாகம் அறிவிப்பை வெளியிட்டுள்ளது.