

அமெரிக்க மண்ணில், இன்று 64 வயதாகும் சுப்ரமணியம் வேதம் (சுபு) காலடி எடுத்து வைத்தபோது அவருக்கு வயது ஒன்பது மாதங்கள் மட்டுமே.
இந்தியாவைப் பூர்வீகமாகக் கொண்ட அவர், பென்சில்வேனியாவின் மண்ணையும் கலாச்சாரத்தையும் மட்டுமே அறிந்தவராக வளர்ந்தார்.
சுபுவின் தந்தை அங்கே பேராசிரியராகப் பணிபுரிந்தார். அமெரிக்கக் காற்றைச் சுவாசித்து, அமெரிக்க உச்சரிப்புடன் பேசிய அந்த இளைஞனின் வாழ்க்கை, யாரும் எதிர்பாராத விதத்தில் ஒரு கருநிழலில் மூழ்கியது.
1980-ஆம் ஆண்டு, அவருடைய வகுப்புத் தோழர் ஒருவர் கொலை செய்யப்பட்ட வழக்கில் சுபு மீது குற்றம் சாட்டப்பட்டது.
தான் நிரபராதி என்று சுபு எவ்வளவோ மன்றாடியும், 1983-ஆம் ஆண்டு அவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.
அப்போது அவருக்கு வயது இருபதுதான். நாற்பத்து மூன்று ஆண்டுகள்! ஒரு மனிதனின் இளமை, நடு வயது, கனவுகள்—அனைத்தும் அதிகபட்சப் பாதுகாப்புச் சிறையின் இரும்புக் கதவுகளுக்குப் பின்னால் உறைந்து போயின.
தன் குற்றமற்ற தன்மையை நிரபிக்க அவர் தொடர்ந்து பல பத்தாண்டுகளாகப் போராடினார்.
சிறைக்குள் இருந்தபோதும் அவர் தன் படிப்பைத் தொடர்ந்தார், சக கைதிகளுக்கு ஆசிரியராக இருந்தார்.
வெளியுலகில் குடும்பம் தவித்தது, ஆனால் சுபுவின் உறுதி மட்டும் குலையவில்லை. நீண்ட நெடிய போராட்டத்துக்குப் பிறகு, அக்டோபர் 2025-இல், சுபுவின் கொலைக் குற்றச்சாட்டு ரத்து செய்யப்பட்டது.
பென்சில்வேனியா வரலாற்றில், அதிக காலம் தவறாகச் சிறைவைக்கப்பட்டு, பின்னர் விடுவிக்கப்பட்டவர் என்ற பெயரை அவர் பெற்றார்.
43 வருடங்களாக அவர் போராடிய நீதி இறுதியாகக் கிடைத்தது! வெளியே வந்த அந்த மகிழ்ச்சி ஒருசில நொடிகூட நீடிக்கவில்லை.
"மழை விட்டாலும் தூவானம் விடலை" என்பதற்கேற்ப, விடுதலையான சுபு, தன்னுடைய குடும்பத்தாரைச் சந்திக்கக் காத்திருந்தபோது, அவர் உடனடியாக அமெரிக்கக் குடியேற்றச் சீர்திருத்த மற்றும் சுங்க அமலாக்கப் பிரிவினரால் (ICE) கைது செய்யப்பட்டார்.
காரணம்: 43 ஆண்டுகளுக்கு முன், 20 வயதில் அவர் மீதான LSD (லைசெர்ஜிக் அமில டைதைலமைடு - இது ஒரு சக்திவாய்ந்த உளப்பிணி மருந்து) தொடர்பான குற்றச்சாட்டுகளை மறுப்பு இல்லாமல் ஏற்றுக்கொண்ட ஒரு வழக்கு.
கொலையில் இருந்து அவரை விடுவித்தது மாநில நீதிமன்றம், ஆனால் நாடு கடத்தல் நடவடிக்கைகளை முன்னெடுப்பது மத்திய அரசின் குடியேற்ற அமைப்பு (ICE). இந்த இரண்டு அரசு அமைப்புகளும் தனித்தனியே செயல்படுகின்றன.
"ஒரு முறை தண்டனை அனுபவித்த தவறுக்கு, இத்தனை ஆண்டுகள் சிறையில் கழித்தது போதாதா?" என்று நீதி கேட்டது சுபுவின் குடும்பம்.
சுபுவின் அக்கா சரஸ்வதியும், அவருடைய சகோதரி மகள் ஸோ மில்லர்-வேதமும் இந்த அநீதிக்கு எதிராகக் குரல் எழுப்பினர்.
"நாற்பது ஆண்டுகளுக்கு முன் செய்த ஒரு தவறுக்காக, தன் வாழ்வின் பெரும் பகுதியைச் சிறையில் கழித்த ஒருவர், இப்போது நாடு கடத்தப்படுகிறாரா?" என்று அவர்கள் கதறினர்.
சுபுவுக்கு இந்தியாவைப் பற்றி எதுவும் தெரியாது, இந்தி பேசத் தெரியாது. அவர் பேசுவது எல்லாம் பிலடெல்பியா உச்சரிப்புதான்.
அவருக்கு இப்போது தேவை குடும்பத்தின் அரவணைப்பு, நவீன உலகைப் புரிந்துகொள்ள ஒரு ஆதரவுக்கரம்.
ஆனால், அமெரிக்க அதிகாரிகள் அவரை, நாடுகடத்தலை எளிதாக்கும் வகையில் விமான ஓடுபாதையைக் கொண்ட லூசியானாவின் அலெக்ஸாண்ட்ரியாவில் உள்ள ஒரு குறுகிய கால தடுப்புக் காவலுக்கு மாற்றினர்.
இந்த இரண்டாவது கொடுமையை எதிர்த்து, சுபுவின் வழக்கறிஞர்கள் நீதிமன்றத்தை நாடினர்.
பென்சில்வேனியாவின் மாவட்ட நீதிமன்றம் மற்றும் ஒரு குடியேற்ற நீதிபதி ஆகிய இருவர் மூலமும் சுபுவின் நாடு கடத்தலுக்குத் தற்காலிகத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
சுபுவின் சட்டப் போராட்டம் தொடர்கிறது.விதி யாரைவிட்டது? நாற்பது ஆண்டுகளுக்கும் மேலாக ஒரு துயரச் சுழற்சிக்குள்ளும் சிக்கியிருக்கும் சுபு, கடைசியாகத் தன் குடும்பத்துடன் சுதந்திரமாக வாழத் துடிக்கிறார்.
அந்த எளிய ஆசை நிறைவேறுமா, இல்லை இந்த புதிய கொடுமை அவரைத் துரத்துமா?இல்லை விட்டு விடுமா?....