சந்திராயன் 3 திட்டத்தின் வெற்றியால் இந்தியாவின் பொருளாதாரம் பன்மடங்காக உயிரும் என நிபுணர்கள் கணித்துள்ளனர்.
நிலவை ஆய்வு செய்வதற்காக இந்தியா அனுப்பிய சந்திரயான் 3 விண்கலம் கடந்த 23ஆம் தேதி நிலவில் வெற்றிகரமாக சாப்ட் லேண்டிங் செய்தது. அன்று மாலை சரியாக 6:00 மணி அளவில் விண்கலத்தின் லேண்டர் தொகுதி நிலவில் வெற்றிகரமாக கால் பதித்தது. இதன் அடுத்த கட்டமான லேண்டரின் உள்ளே இருக்கும் ரோவர், நிலவில் இறங்கும் நிகழ்வானது அடுத்த நாள் காலை 8:30 மணியளவில் நடந்தது.
இதன் மூலமாக சந்திரயான் 3 திட்டம் முழு வெற்றியடைந்ததாக அறிவிப்புகள் வெளியானது. இந்நிலையில் லேண்டரிலிருந்து ரோவர் வெளிவரும் காணொளியை இன்று காலை இஸ்ரோ வெளியிட்டது. அத்துடன் ரோவர் வெளியேறுவதற்கு முன்பாக நிலவின் மேற்பரப்பு குறித்த வீடியோவும் வெளியானது.
இதற்கு முன்னதாக நேற்று இஸ்ரோ தரப்பில் வெளியான அறிவிப்பில், "எல்லா செயல்பாடுகளும் நாங்கள் திட்டமிட்டபடி நல்ல முறையில் நடக்கிறது. ரோவரின் இயக்கம் மற்றும் அதில் உள்ள எல்லா கருவிகளும் சிறப்பாக செயல்படுகிறது. லேண்டரில் இருக்கும் கருவிகளும் நல்ல முறையில் இயங்குகிறது. அதேபோல நிலவின் சுற்றுப்பாதையில் வலம் வந்து கொண்டிருக்கும் உந்துவிசைக் கலனின் ஷேப் என்ற சாதனம் கடந்த 20ஆம் தேதி முதல் ஆய்வுப் பணியை மேற்கொண்டு வருகிறது" எனத் தெரிவிக்கப்பட்டது.
இஸ்ரோவின் இந்த மகத்தான சாதனை காரணமாக, இந்தியாவின் பொருளாதாரம் பன்மடங்காக உயரும் என பொருளாதார வல்லுநர்கள் கணித்துள்ளனர். தற்போது இஸ்ரோவின் மதிப்பு 8 பில்லியன் டாலர்களாக இருந்து வரும் நிலையில், இன்னும் 30 ஆண்டுகளில் இதன் மதிப்பு 100 பில்லியன் டாலர்களைக் கடக்கும் என அமெரிக்க பொருளாதார கணிப்பு நிறுவனம் ஒன்று தெரிவித்துள்ளது. இதனால் இந்தியாவின் பொருளாதாரம் அதிக அளவில் உயரும்.
இஸ்ரோவுக்கு தேவையான உதிரி பாகங்களை செய்துத் தரும் நிறுவனங்களில் பெரும்பாலானவை இந்திய நிறுவனங்கள் என்பதால், இஸ்ரோ வளர்ச்சி அடையும்போது, அதைச் சார்ந்திருக்கும் நிறுவனங்களும் பொருளாதாரத்தில் உயரும். இது இந்தியாவுக்கு மிகப்பெரிய நன்மையை ஏற்படுத்தும் எனக் கணித்துள்ளனர்.