சமீபத்தில்தான் செங்கடல் பகுதியில் ஒரு படகு விபத்து ஏற்பட்டது. இதனையடுத்து மீண்டும் டாராக் தீவில் படகு விபத்து ஏற்பட்டிருக்கிறது.
விமான விபத்து மற்றும் படகு விபத்து போன்றவை சாலை விபத்துகளைவிட மிகவும் கொடுமையானவை. ஏனெனில், சாலை விபத்துக்களின்போது நாம் விரைவாக அவர்களை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று காப்பாற்றிவிடலாம். ஆனால், விமான விபத்தும் படகு விபத்தும் அப்படியல்ல. அவர்களை மீட்பதென்பதே மிகவும் சிரமமாகிவிடும். இதன்பின்னர் அவர்களை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று உயிரைக் காப்பாற்றுவது மிகவும் சவாலான விஷயமாகிவிடும். இதனால் இந்த இரண்டிற்கும் ஏராளமான பாதுகாப்பு நெறிமுறைகள் பின்பற்றப்படும்
அப்படியிருந்தும்கூட அவ்வப்போது விபத்துக்கள் நடக்கத்தான் செய்கின்றன.
சமீபத்தில்தான் செங்கடலில் ஒரு சுற்றுலா படகு விபத்துக்குள்ளானது. இந்த படகு எகிப்தின் கடலோர நகரமான மார்சா ஆலமின் தெற்கில் மூழ்கியது. இந்த படகில் 13 நாடுகளைச் சேர்ந்த சுற்றுலா பயணிகள் இருந்தனர். இதில் 28 பேர் பலத்த காயங்களுடன் மீட்கப்பட்டு விமானம் மூலம் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். மீதமுள்ளவர்களை தேடும் பணி தீவிரமாக நடந்தது.
இதனையடுத்து இப்போது மீண்டும் ஒரு படகு விபத்து ஏற்பட்டிருக்கிறது. மத்திய ஆப்பிரிக்க நாடான கேமரூனின் லோகோனெட்-சாரி பகுதியில் உள்ள டாராக் தீவில் இருந்து பயணிகளை ஏற்றிச் சென்ற படகு சென்று கொண்டிருந்தது. இந்தநிலையில் நடுக்கடலில் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. தகவல் கிடைத்ததும் மீட்புக் குழுவினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர்.
இந்த விபத்தில் 20 பேர் பலியாகியுள்ளனர். மேலும் காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். மாயமனவர்களைத் தேடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. இதனால் பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது.
இந்த விபத்துக்கான காரணம் இன்னும் தெரிய வரவில்லை. போலீஸார் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர். அதிக சுமை ஏற்றுதல், முறையற்ற செயற்பாடுகள் மற்றும் கடுமையான காலநிலை காரணமாக இப்பகுதியில் படகு விபத்துக்கள் அடிக்கடி இடம்பெற்று வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.