கடலூர் மாவட்டம், என்எல்சி தொழிற்சாலையில் பழுப்பு நிலக்கரி வெட்டி எடுக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்த நிறுவனத்தின் இரண்டாவதாக செயல்படும் சுரங்கத்தில் பல கோடி ரூபாய் மதிப்புடைய மிகப்பெரும் ராட்சத இயந்திரங்கள் கொண்டு நிலக்கரி வெட்டி எடுக்கப்படுகிறது. இன்று காலை பல லட்ச ரூபாய் மதிப்புடைய ஒரு இயந்திரத்தில் உள்ள கன்வேயர் பெல்ட்டில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. அதைக் கண்டு மிகவும் அதிர்ச்சி அடைந்த இந்நிறுவன ஊழியர்கள் உடனே தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.
இந்த திடீர் தீ விபத்தில் எம் டி சி எனக் குறிப்பிடப்படும் நிலக்கரியை எடுத்துச் செல்லும் இயந்திரம் தீ பிடித்து பலத்த சேதம் அடைந்து உள்ளது. சமீப சில நாட்களாக இந்நிறுவன ஊழியர்கள் செய்து வந்த போராட்டத்தின் காரணமாக இயந்திரங்களின் பராமரிப்புப் பணி நடைபெறாமல் இருந்ததே இந்த விபத்துக்குக் காரணம் என்று கூறப்படுகிறது.
கன்வேயர் பெல்ட்டில் தீ பிடித்து நாசம் அடைந்திருக்கும் அந்த இயந்திரத்தின் மதிப்பு பல கோடி ரூபாய் என்று சொல்லப்படுகிறது. அது மட்டுமின்றி, கடந்த சில நாட்களாக ஒப்பந்தத் தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால், என்எல்சி நிறுவனம் புதிய பணியாளர்களைக் கொண்டு பணிகளைச் செய்து வந்ததும் இந்த தீ விபத்துக்குக் காரணம் என்று சொல்லப்படுகிறது.
தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் முழுமூச்சுடன் ஈடுபட்டு வருகின்றனர். இந்தத் தீ விபத்தால் அப்பகுதி முழுவதும் புகை மண்டலமாகக் காட்சி அளிக்கிறது. திடீரென ஏற்பட்ட இந்தத் தீ விபத்தால் அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பு நிலவுகிறது.