தென்காசி மாவட்டம், ஆய்க்குடி சாலையில் மைனாபேரி மலைப்பகுதியில் உள்ள வனப்பகுதியில் பயங்கரக் காட்டுத்தீ ஏற்பட்டு இருக்கிறது. இந்த வனப்பகுதியில் அதிமாக மான்கள், முயல், பாம்புகள் மற்றும் ஏராளமான பறவை இனங்கள் வாழ்ந்து வருகின்றன. இதுமட்டுமின்றி, உடல் பிரச்னைகளைப் போக்கும் பல்வேறு மூலிகைச் செடி, கொடி, மரங்களும் இந்த வனத்தில் அதிகமாக இருக்கிறது. இந்த மலை வனப்பகுதியில் நேற்று மாலை சிறிய அளவில் புகை மூட்டத்துடன் தீப்பிடித்தது. அந்தத் தீ காற்று அதிகமாக வீசியதன் காரணமாக வேகமாகப் பரவி இந்த மலைப்பகுதி முழுவதும் ஒரு கிலோ மீட்டர் தொலைவுக்கும் அதிகமாகப் பரவி எரிந்து வருகிறது.
இதைக் கண்ட பொதுமக்கள் தீயணைப்பு மற்றும் வனத்துறையிருக்குத் தகவல் தெரிவித்தும் அதை அவர்கள் பெரிதாக எடுத்துக்கொள்ளாத நிலையில், தற்போது அந்தத் தீ பெரிய அளவில் பரவி இருக்கும் நிலையில், அந்த மலையடிவாரத்தில் வசிக்கும் மக்கள் பெரிதும் கலக்கத்தில் இருக்கின்றனர். இந்த மலை வனத்தில் உள்ள அரிய வகை மூலிகைச் செடி, கொடிகள் மற்றும் மதிப்பு மிக்க மரங்கள் இந்த தீ விபத்தில் எரிந்து வீணாவதோடு, அந்த வனத்தில் வசிக்கும் மான்கள், பறவை இனங்களும் இந்தத் தீ விபத்தில் பெரிதும் பாதிக்கப்பட்டு இருக்குமோ என்ற அச்சத்தில் அனைவரும் ஆழ்ந்து இருக்கிறார்கள். இதையடுத்து, தற்போது தென்காசி தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்துக்கு வந்திருக்கும் நிலையில், இந்த வனப்பகுதியில் ஏற்பட்டிருக்கும் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்தத் தீ விபத்து குறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், “இந்த மலை வனப்பகுதியில் அதிகமாக மான்கள் வசித்து வருகின்றன. மலையில் ஏற்பட்டுள்ள தீ விபத்தால் அவற்றின் நிலைமை என்னவாகி இருக்குமோ என்ற அச்சம் ஏற்பட்டு இருக்கிறது. அதனால் இந்த மலையை பாதுகாக்கப்பட்டப் பகுதியாக அரசாங்கம் அறிவித்து மலையைச் சுற்றி வேலைகள் அமைக்க வேண்டும். அதோடு, இந்த தீயையும் முற்றிலும் அணைக்கும் முயற்சியில் ஈடுபட வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்து இருக்கின்றனர்.