அனுமன் சிலை நகர்த்தப்பட்டதைக் கண்டித்து ஸ்ரீரங்கம் கோயிலில் திடீர் போராட்டம்!

அனுமன் சிலை நகர்த்தப்பட்டதைக் கண்டித்து ஸ்ரீரங்கம் கோயிலில் திடீர் போராட்டம்!

பூலோக வைகுண்டம் என்று போற்றப்படுகிறது திருமாலின் திருத்தலமான ஸ்ரீரங்கம், ஸ்ரீ ரங்கநாதர் ஆலயம். 108 திவ்ய தேசத் தலங்களில் ஒன்றாகத் திகழும் தமிழகத்தின் மிக உயர்ந்த கோபுரம் கொண்ட கோயிலும் இதுவே. இக்கோயிலின் உள்ளே உள்ள கொடிமரத்தின் முன்பு மூவாயிரம் ஆண்டுகளாக இருந்த அனுமன் சிலையை கொரோனா காலத்தில் நான்கு அடி தொலைவுக்கு நகர்த்தி வைத்துள்ளதாகவும், அந்தச் சிலையை மீண்டும் அதே இடத்திலேயே வைக்கக் கோரியும், மேலும் ஶ்ரீ ரங்கநாத ஸ்வாமி மூலவர் திருவடியை பராமரிப்பு என்ற பெயரில் சிதிலம் செய்துள்ளனர். அதனை பழையபடி சீரமைக்க வேண்டும் என வலியுறுத்தியும் ஸ்ரீராமானுஜர் திருமால் அடியார்கள் குழாமைச் சேர்ந்தவர்கள் கோயிலின் உள்ளே திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், விருதுநகர், திருச்சி, உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வந்திருந்த ஆண், பெண் பக்தர்கள் 300க்கும் மேற்பட்டோர் ஸ்ரீரங்கம் கோயில் ஆரியபட்டால் வாசலில் உள்ள தங்கக்கொடி கொடிமரத்தின் முன்பு ஜால்ரா வாசித்து இந்தப் போராட்டத்தில் கலந்து கொண்டனர்.

ஸ்ரீரங்கம் உதவி ஆணையர் திவ்யா, ஸ்ரீரங்கம் காவல் நிலைய ஆய்வாளர் அரங்கநாதன், ஸ்ரீரங்கம் கோயில் இணை ஆணையர் மாரிமுத்து உள்ளிட்ட அதிகாரிகள் சமரசப் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். ஆனால், போராட்டக்காரர்களுக்கும் அதிகாரிகளுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. அதன் பின்னர் காவல் துறையினர் நடத்திய பேச்சுவார்த்தையில் அவர்களது கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என உறுதி அளித்ததன் அடிப்படையில் போராட்டத்தைக் கைவிட்டு அவர்கள் கலைந்து சென்றனர்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com