முட்டைகளுக்கு வந்தது திடீர் கட்டுப்பாடு.

முட்டைகளுக்கு வந்தது திடீர் கட்டுப்பாடு.
Published on

கோழி முட்டைகள் உற்பத்தியில் நாமக்கல் மாவட்டம் முன்னணியில் இருப்பது நமக்குத் தெரிந்ததே. அங்கிருந்து முட்டைகள் இந்தியா மட்டுமின்றி வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி ஆகிறது. சமீபத்தில் மலேசியாவிற்கும் முட்டைகள் ஏற்றுமதி ஆனது குறித்து பண்ணையாளர்கள் மகிழ்ச்சியுடன் இருந்தார்கள். இந்த நிலையில் கோழிகளுக்கு நோய்த்தாக்குதல் இல்லை என சான்றிதழ் அளித்தால் மட்டுமே முட்டைகள் ஏற்றுமதி செய்ய அனுமதிக்கப்படும் என மலேசிய அரசு கட்டுப்பாடு விதித்துள்ளது. இதனால் அந்த மகிழ்ச்சியில் சிறிதளவு தொய்வு ஏற்பட்டுள்ளது. அதைப் பற்றிய செய்திதான் இது.

நாமக்கல் மண்டலத்தில் உள்ள கோழி பண்ணைகளில் தினமும் 6 கோடி முட்டைகள் உற்பத்தி ஆகிறது. இந்த முட்டைகள் தமிழக அரசின் சத்துணவு திட்டம் வெளி மாநிலங்கள், வெளிநாடுகளுக்கு செல்கிறது. இங்குள்ள கோழிப்பண்ணைகளில் தரமான முட்டை உற்பத்தி செய்யப்படுவதால் வெளிநாடுகளில் நாமக்கல் முட்டைகளின்  தேவை அதிகரித்து வருகிறது. தற்போது நாமக்கலில்  இருந்து மஸ்கட், பக்ரைன், கத்தார் சைபீரியா, துபாய், சிரியா, ஆப்பிரிக்கா, ஆப்கானிஸ்தான், மாலத்தீவு போன்ற நாடுகளுக்கு மாதம் 8 கோடி முட்டைகள் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது. புதியதாக மலேசியாவிற்கு கடந்த டிசம்பரில்  கண்டெயினர்களில்  10 லட்சம் முட்டைகள் அனுப்பி வைக்கப்பட்டது.

இந்நிலையில் மலேசியா அரசாங்கம் நாமக்கல் முட்டைகளை இறக்குமதி செய்ய  புதிய கட்டுப்பாடுகளை கொண்டு வந்துள்ளது. ஏற்றுமதி செய்யப்படும் முட்டைகள் உற்பத்தி செய்யப்படும் கோழிப் பண்ணைகளில் உள்ள கோழிகளுக்கு நோய் தாக்கங்கள் ஏதும் இல்லை என்று சான்றிதழ் அளிக்க வேண்டும். குறிப்பாக பவுல் காலரா, சால்மனலா பாக்டீரியா ஜஸ்ட் போன்ற மூன்று வகையான நோய் தாக்கத்தில் இல்லை என சான்றிதழ் அளிக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது. நாமக்கல்லில் இருந்து மலேசியாவுக்கு முட்டை ஏற்றுமதி நிறுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் நாமக்கல்லில் முட்டை ஏற்றுமதியாளர்கள் சங்கம் அகில இந்திய முட்டை ஏற்றுமதியாளர்கள் சமயலகம் ஆகியவை இணைந்து ஏற்றுமதியில் உள்ள சிக்கல்களை களைவது தொடர்பான ஆலோசனைக் கூட்டத்தை நடத்தியது.

இதில் எக்ஸ்போர்ட் ஆய்வு அமைப்பினர், கால்நடை. மருத்துவக் கல்லூரி முதல்வர்கள் ஒன்றிய அரசின் கால்நடை துறை அமைச்சர் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் சான்றிதழ் பெறுவதற்கான வழிமுறைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. இந்த கூட்டத்திற்கு பின் அகில இந்திய முட்டை ஏற்றுமதியாளர் சங்க செயலாளர் வல்சன் பரமேஸ்வரன் நிருபர்களிடம்  கூறியதாவது நாமக்கல் உற்பத்தி ஆகும் முட்டைகள் தரமான முட்டைகள் என்பதால் மலேசியா அரசு ஏற்றுக் கொண்டது. ஆனால் இங்குள்ள கோழிகளுக்கு மூன்று விதமான நோய்கள் இல்லை என சான்று அளிக்கும்படி இப்போது கேட்டுள்ளது. ஆண்டடலூர் கேட்டில் உள்ள ஆய்வகத்தில் அதற்கான சான்றிதழ் பெறமுடியாது. பெங்களூருவில் உள்ள மத்திய அரசின் ஆய்வகத்தில் தான் கோழிகளை பரிசோதனை செய்து அந்த சான்றிதழை பெற முடியும். இந்த பிரச்னை குறித்து டெல்லியில் கால்நடைத்துறை இணை ஆணையர் கூடுதல் இயக்குநரை சந்தித்து பேசி உள்ளோம். அவர்கள் மலேசியா அரசுக்கு கடிதம் எழுதுவதாக கூறியுள்ளார். சான்றிதழ் கிடைத்தவுடன் நாமக்கல்லில் இருந்து இலங்கை இந்தோனேசியா  நாடுகளுக்கு முட்டை ஏற்றுமதி செய்ய முடியும். மலேசியாவுக்கு தினமும் மூன்று கோடி முட்டை தேவைப்படுகிறது. எனவே அந்த நாட்டுக்கு நாமக்கல்லில் இருந்து தொடர்ந்து முட்டை சப்ளை செய்ய தேவையான நடவடிக்கை எடுத்து வருகிறோம் “என்று கூறினார்.

நோய்த்தாக்குதல் இருந்தால்  அதைப் சாப்பிடும் மக்களுக்கும் நோய்கள் தொற்றும் அபாயம் உள்ளதால் அதற்கு முன்பே முன்னெச்சரிக்கையாக சான்றிதழ் கேட்பது மலேசிய அரசுக்கு  மக்கள் மேல் உள்ள அக்கறையைக் காட்டுகிறது. நியாயம்தானே?

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com