
கர்நாடகாவில் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்தி முடிப்பதில் காங்கிரஸ் தீவிரம் காட்டியதால் கடந்த செப்டம்பர் 22-ம் தேதி முதல் சாதிவாரி கணக்கெடுப்பு நடைபெற்று வருகிறது. முன்னதாக, 2015-ல் இன்றைய முதல்வர் சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் அரசு சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தியது. அது எடுக்கப்பட்டு 10 ஆண்டுகள் ஆகிவிட்டதால் தற்போது புதிதாக சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த முடிவெடுத்த சித்தராமையா அரசு தற்போது அதை நடைமுறைப்படுத்தியுள்ளது.
அந்த வகையில் கர்நாடக மக்களின் சமூக, கல்வி மற்றும் பொருளாதார நிலைமைகள் குறித்த தரவுகளை சேகரிப்பதை நோக்கமாகக் கொண்ட இந்த கணக்கெடுப்பின் ஒரு பகுதியாக, கணக்கெடுப்பாளர் பெங்களூரு உட்பட மாநிலம் முழுவதும் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். செப்டம்பர் 22-ம் தேதி தொடங்கிய இந்த சாதிவாரி கணக்கெடுப்பு பணிகளில் அரசு பள்ளி ஆசிரியர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். அவர்கள் வீடு வீடாக சென்று கணக்கெடுக்கும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
பாஜக மாநிலங்களவை எம்.பியும் இன்ஃபோசிஸ் நிறுவனர் நாராயண மூர்த்தியின் மனைவியும், இன்போசிஸ் அறக்கட்டளையின் தலைவருமான சுதாமூர்த்தி மற்றும் அவரது கணவர் நாராயண மூர்த்தியும் பெங்களூருவில் வசித்து வருகின்றனர். கர்நாடக மக்களின் சமூக, கல்வி மற்றும் பொருளாதார நிலைமைகள் குறித்த தரவுகளை சேகரிப்பதை நோக்கமாகக் கொண்ட கணக்கெடுப்பின் ஒரு பகுதியாக கணக்கெடுப்பாளர்கள் அவர்களது வீட்டிற்கு சென்றனர்.
அப்போது சுதாமூர்த்தி, அவரது கணவர் நாராயணமூர்த்தி அங்கு இருந்தனர். ஆனால் சுதாமூர்த்தி தம்பதி கர்நாடக சாதி வாரி கணக்கெடுப்பில் பங்கெடுக்க மறுத்து, தங்களது குடும்பத்தை பற்றிய தகவல்களையும், தங்களது சாதி மற்றும் பிற விவரங்களையும் கொடுக்க மறுத்துவிட்டனர்.
தற்போது கர்நாடக காங்கிரஸ் அரசு சாதி மாநிலத்தில் வாரி கணக்கெடுப்பு நடத்தி வரும் நிலையில் பாஜக மாநிலங்களவை எம்.பி.யான சுதா மூர்த்தி தனது தனிப்பட்ட விருப்பமாக தனது சாதி விவரத்தைத் தெரிவிக்க மறுத்து விட்டதாக கூறப்படுகிறது. அவரின் இந்த முடிவை கர்நாடக அரசும் ஏற்றுக்கொண்டுள்ளது.
அதாவது, சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பால் எந்த பயனும் இல்லை என்று கூறி, சுதாமூர்த்தி தம்பதி புறக்கணித்து விட்டதாக கூறப்படுகிறது. மேலும், நாங்கள் எந்த பிற்படுத்தப்பட்ட வகுப்பையும் சேர்ந்தவர்கள் அல்லாததால், பங்கேற்பது அரசாங்கத்தின் கணக்கெடுப்பு முயற்சிகளுக்கு உதவாது என்றும் சுதா மூர்த்தி கடிதம் எழுதி கொடுத்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேட்டியளித்த காங்கிரஸ் தலைவரும், மாநில தொழிலாளர்துறை அமைச்சருமான சந்தோஷ் லாட், சுதா மூர்த்தி இந்தக் கணக்கெடுப்பில் பங்கேற்க மறுத்தது அவரது தனிப்பட்ட விருப்பம். அரசு என்ற முறையில், இதில் பங்கேற்க யாரையும் நாங்கள் கட்டாயப்படுத்த முடியாது என்றும் மத்திய அரசின் கணக்கெடுப்பிலும் அவர் இதேபோல் பேசுவார் என்று நம்புகிறேன் என்று கூறினார்.
இதுவரை, பெங்களூருவில் சுமார் 15.42 லட்சம் வீடுகளில் கணக்கெடுப்பாளர்கள் கணக்கெடுப்பை நடத்தி முடித்துள்ளனர். இருப்பினும் எத்தனை பேர் பங்கேற்க மறுத்துவிட்டார்கள் என்பது பற்றி தெளிவாகத் தெரியவில்லை. பதிலளித்தவர்களில், 25% கேள்விகளுக்கு மட்டுமே பதிலளித்துள்ளதாக கூறப்படுகிறது.
கர்நாடக மாநில பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தால் நடத்தப்பட்டு வரும் மாநில அளவிலான சமூக மற்றும் கல்வி கணக்கெடுப்பு, சமூக பின்தங்கிய நிலையை அளவிடுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. கர்நாடக மாநிலம் முழுவதும் இந்த கணக்கெடுப்பு கடந்த செப்டம்பர் 22-ம் தேதி தொடங்கி அக்டோபர் 7-ம் தேதி முடிவடைய திட்டமிடப்பட்டது, ஆனால் தற்போது அக்டோபர் 18-ம்தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் பீகார், கர்நாடகம், தெலுங்கானா, ஒடிசா ஆகிய மாநிலங்களில் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தி முடிக்கப்பட்டிருக்கிறது. ஆனால் தமிழக அரசு மட்டும் தனக்கு அதிகாரம் இல்லை என்று சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த தொடர்ந்து மறுத்து தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது.