நேற்று பாகிஸ்தானில் உள்ள தசு என்ற இடத்தில் தற்கொலைப் படை தாக்குதலில் ஐந்து சீனர்கள் உட்பட 6 பேர் பலியாகியுள்ளனர். இந்தச் சம்பவம் பாகிஸ்தானில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பாகிஸ்தானில் குண்டு வெடிப்பு போன்ற பல சம்பவங்கள் வழக்கமாகவே நடைபெறும். இதற்கு பலரும் பாதுகாப்பு மற்றும் உளவு அமைப்புகள் வலுவாக இல்லாததுதான் காரணம் என்று கூறுகின்றனர். பாகிஸ்தானின் வடமேற்கு பகுதியில் சீன நாட்டவர்களைக் குறிவைத்து தாக்கிய இந்தச் சம்பவத்தை பாகிஸ்தான் போலீஸார் உறுதி செய்துள்ளனர்.
இதனையடுத்து நேற்று கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் உள்ள தசு என்ற இடத்தில் பாலம் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வந்தன. இந்தக் கட்டுமானத்தை சீன பொறியாளர்களே செய்து வந்தனர். ஆகையால் பல சீனர்கள் அந்த இடத்தில் பணியில் ஈடுபட்டு வந்தனர். அதேபோல் சில சீனர்கள் அந்த பாலம் கட்டுமானம் செய்யும் இடத்திற்கு இஸ்லாமாபாத்திலிருந்து காரில் சென்றுக்கொண்டிருந்தார்கள்.
அந்தத் தாக்குதல் குறித்து அந்த மாகாணத்தின் காவல்துறை அதிகாரி கூறியதாவது, “ஒரு தற்கொலை படை பயங்கரவாத இயக்கத்தைச் சேர்ந்த ஒருவர் கார் முழுவதும் வெடி மருந்துகளை நிரப்பி சீனர்கள் வந்த காரின்மீது மோதியுள்ளார். இதனால் சம்பவ இடத்திலேயே ஐந்து பேர் உடல் சிதறி உயிரிழந்துவிட்டனர்” என்று கூறி அதில் பாகிஸ்தானைச் சேர்ந்த ஓட்டுனர் ஒருவரும் கொல்லப்பட்டதாகத் தெரிவித்தார்.
இந்த தற்கொலைப் படை தாக்குதல் நடந்தவுடனே போலீஸாருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் உடனே அந்த இடத்திற்கு விரைந்து சோதனை நடத்தினார்கள். சீனா காரைத் தவிர முன்னும் பின்னும் வந்த எந்தக் காருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என்பது சோதனையில் தெரியவந்தது. ஆனால் சீனா இன்னும் இதுத்தொடர்பாக அதிகாரப்பூர்வ அறிவிப்பை எதுவும் வெளியிடவில்லை.
இதேபோல் கடந்த 2021ம் ஆண்டில் பஸ் ஒன்றில் நடந்த குண்டுவெடிப்பில் 9 சீனர்கள் உட்பட 13 பேர் கொல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது. மேலும் தசு என்ற இடத்தில் பாகிஸ்தான் கட்டி வரும் பாலம் உள்ளூர் காரர்களுக்கு பிடிக்கவில்லை என்பதால் இந்தத் தாக்குதல் நடந்திருக்கக் கூடும் என்றுத் தெரியவருகிறது.