தாலிபான் அட்டூழியம்: பாகிஸ்தானில் மனித குண்டு வெடிப்புக்கு 46 பேர் பலி!

மனித  வெடிகுண்டு நடைபெற்ற இடத்தின் ஒரு பகுதி
மனித வெடிகுண்டு நடைபெற்ற இடத்தின் ஒரு பகுதி

பாகிஸ்தானில் மனித குண்டு வெடிப்பு சம்பவத்தில் குறைந்தது 46 பேர் கொல்லப்பட்டு இருக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.

அந்நாட்டின் வடமேற்கு கைபர் பக்துன்குவா மாநிலத்தில் நேற்று நடைபெற்ற இந்த சம்பவத்தில், இரு நூறுக்கும் மேற்பட்டவர்கள் காயம் அடைந்துள்ளனர். பஜாவர் மாவட்டத்தின் கர் வட்டாரத்தில் ஜமியத் உலமா இஸ்லாம்- பாசில் எனும் கட்சியின் கூட்டத்தில்தான் இந்தக் கொடூரம் அரங்கேறி உள்ளது.

சம்பவம் நடந்தபோது, மனித வெடிகுண்டாகச் செயல்பட்ட நபர் குண்டை வெடிக்கும் காட்சியைக் கொண்ட காணொலிகள் சமூக ஊடகங்களில் தீயாய்ப் பரவிவருகிறது. அதில், கூட்டத்தில் கலந்துகொண்டவர்கள் சொற்பொழிவை ஆர்வமாக கவனித்துக்கொண்டு இருந்தது ஒரு காணொலியில் காட்டப்படுகிறது. அப்போது திடிரென குண்டு வெடித்து நிகழ்ச்சிக்காக அமைக்கப்பட்ட கொட்டகையின் கடைசியில் இருந்தவர்கள்வரை எல்லாரும் உயிரைப் பிடிக்க ஓடும் காட்சியும் பதிவாகியுள்ளது.

இன்னொரு காணொலியில், முன்வரிசையில் மூத்த தலைவர்கள் பலரும் உட்கார்ந்திருக்க அவர்களுக்கு மிக அருகில்தான் குண்டுவெடிப்பு அரங்கேறியது காட்டப்பட்டுள்ளது. குண்டு வெடித்ததும் கொட்டகையின் ஒரு பக்கத்தில் உள்ளவர்கள் மொத்தமாகத் தப்பிக்க முயல, அது அப்படியே சாய்ந்தது என நேரடி சாட்சி ஒருவர் ஊடகங்களிடம் தெரிவித்துள்ளார்.

ஜேயுஎல்-எஃப் எனும் அந்தக் கட்சியின் தலைவர் மௌலானா பஸ்லூர் ரஹ்மான், சம்பவத்தை முன்னிட்டு ஆழ்ந்த இரங்கலையும் வருத்தத்தையும் தெரிவித்துள்ளார். மத்திய, மாநில அரசுகள் பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

பாகிஸ்தான் பிரதமர் செபாஸ் சரீபும் வன்மையான கண்டனத்தைத் தெரிவித்துள்ளார். குற்றவாளிகளைக் கண்டுபிடிக்க உரிய விசாரணை நடத்தப்படும் என்றும் அவர் கூறியுள்ளார். உள்துறை அமைச்சர் ரனா சனாவுல்லாவிடமும் மாகாண அரசாங்கத்திடமும் பிரதமர் அலுவலகம் விரிவான அறிக்கையைக் கேட்டுள்ளது.

இதனிடையே, அசோசியேட்டட் பிரஸ் செய்தி நிறுவனத்துக்குத் தொடர்புகொண்ட பாகிஸ்தான் தாலிபன் இயக்கம் இந்தக் கொடூரத் தாக்குதலுக்குப் பொறுப்பேற்றுள்ளது.

முன்னதாக, பாகிஸ்தான் தாலிபான் இயக்கத்தினரின் செல்வாக்கு பெற்ற பகுதியாக இது இருந்தது. பின்னர் அரசாங்கம் அங்கிருந்து தீவிரவாதிகளை விரட்டிவிட்டது. அண்மையில் ஆப்கனில் தாலிபான்கள் அதிகாரத்துக்கு வந்தபிறகு, பாகிஸ்தான் தாலிபன்களின் கை இங்கு ஓங்கத் தொடங்கியுள்ளது.

இந்த நிலையில், ஆப்கானிஸ்தான் தாலிபன் இயக்க செய்தித்தொடர்பளர் ஜபியுல்லா முஜாகித் வெளியிட்ட ட்விட்டர் செய்தியில், இப்படியான குற்றங்கள் எந்த வகையிலும் நியாயப்படுத்த முடியாதவை என்று குறிப்பிட்டுள்ளார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com