சுகவனேஸ்வரர் கோவில் வைகாசி விசாக தேரோட்டம்.

சுகவனேஸ்வரர் கோவில் வைகாசி விசாக தேரோட்டம்.
Published on

சேலத்தில் வைகாசி விசாகத் திருவிழா தேரோட்ட ஏற்பாடுகள்  நிறைவு பெற்று, இன்று நடைபெற்ற சுகவனேஸ்வரர் கோவில் தேரோட்டத்தில் பக்தர்கள், பொதுமக்கள் முதல் அதிகாரிகள் என்று திரளான பகதர்கள் கலந்துகொண்டு ஈஸ்வரர் அமர்ந்து ஆடி வந்த தேரை தரிசித்து மகிழ்ந்தனர்.

சேலம் நகரின் மத்தியில் திருமணிமுத்தாற்றின் மேற்கு கரையில் பழமையான பிரசித்திபெற்ற சுகவனேஸ்வரர்,  அழகிரிநாத பெருமாள் கோவில்கள் உள்ளன. இந்தக் கோவில்களில் ஆண்டுதோறும் வைகாசி மாதம் விசாகத் திருவிழா விமரிசையாக நடைபெறுவது வழக்கம். இந்த விழாவின்போது இரண்டு  நாட்கள் தேரோட்டம் நடத்தப்படும். முதல் நாளில் சுகவனேஸ்வரர் தேரும், இரண்டாவது நாளில் பெருமாள் தேரும் வலம் வரும். சைவ, வைணவ ஒற்றுமைக்கு இலக்கணமாக திகழும் இந்த விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கூடுவார்கள். இந்த ஆண்டுக்கான வைகாசி விசாக திருவிழா இரண்டு கோவில்களிலும் நடைபெற்று வருகிறது.

சேர, சோழ, பாண்டிய மன்னர்களாலும், நாயக்க மன்னர்களாலும் போற்றப்பட்ட சுகனவனேஸ்வரர் கோவில், அருணகிரிநாதராலும், அவ்வையாராலும் பாடப்பட்ட தலமாகும். இந்த கோவில் வைகாசி விசாக திருவிழா கடந்த ரத விநாயகர் பூஜையுடன் தொடங்கியது. 25-ந்தேதி கொடியேற்றமும், தொடர்ந்து காலை மாலை சாமி புறப்பாடும் நடைபெற்று வருகிறது. விழாவில் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் இன்று (வெள்ளிக்கிழமை) நடைபெற்றது. இதையொட்டி இன்று காலை 7 மணிக்கு சிறப்பு பூஜைகள் நிறைவு பெற்று அலங்காரத்துடன் பக்தர்களின் தரிசனத்துக்கு சுவாமி தேரில் எழுந்தருளினார். பின்பு 9.30 மணி அளவில்  தேரோட்டம் துவங்கியது.

இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தார்கள். ஐந்து ஆண்டுக்கு பின்னர் இந்த தேரோட்டம் நடப்பதால் பக்தர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.

இதேபோல் புகழ்பெற்ற வைணவத் தலமான சேலம் கோட்டை அழகிரிநாத பெருமாள் கோவில் வைகாசி விசாக உற்சவ திருவிழாவும்  நடைபெற்று வருகிறது. விழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் நாளை (3-ந்தேதி) நடைபெறுவுள்ளது. இதையொட்டி அன்று காலை அழகிரிநாதர், ஸ்ரீதேவி, பூதேவி தாயார்களுடன் ராஜ அலங்காரத்தில் எழுந்தருளுகிறார். தொடர்ந்து தேர்வீதிக்கு சாமி எழுந்தருள்கிறார். இதைத் தொடர்ந்து சிறப்பு பூஜை நடக்கிறது. பின்பு தேரோட்டம் தொடங்கும். திரளான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுப்பார்கள். ராஜகணபதி கோவில் பகுதியிலிருந்து புறப்படும் தேர் முக்கிய வீதிகள் வழியாக வலம் வந்து மீண்டும் ராஜகணபதி கோவில் அருகே நிலை சேரும்.

அடுத்தடுத்து இரண்டு  நாட்கள் தேரோட்டம் நிகழ்வதால் சேலம் மாநகரம் விழா கோலம் பூண்டுள்ளது.  இரண்டு கோவில்களிலும் வழக்கத்தை விட பக்தர்கள் கூட்டம் அதிகமாக உள்ளது. கோவில்கள் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு உள்ளன. தற்காலிக கடைகள் ஆங்காங்கே முளைத்துள்ளன. தேரோட்டத்தை முன்னிட்டு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டு உள்ளன. தேரோட்டத்தை முன்னிட்டு சேலம் கடைவீதி தேரடியில் தொடங்கி கடைவீதி வரை உள்ள  பகுதிகளில் 2, 3-ந் தேதிகளில் மின் விநியோகம் இருக்காது என்று முன்னெச்சரிக்கையாக மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தேர்த்திருவிழா ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறையினர் மற்றும் கோவில் அறங்காவலர் குழுவினர், பக்தர்கள் அமைப்பினர் செய்து வருகிறார்கள்.

கும்பாபிஷேகம் முடிந்து புதுப் பொலிவுடன் விளங்கும் பிரசித்திபெற்ற கோவிலான சேலம் சுகவனேஸ்வரர் ஆலயம் மற்றும் சேலம் கோட்டை அழகிரிநாதர் கோவில்களின் வைகாசிப் பெருவிழா கொண்டாட் டங்களால் சேலம் மாநகரம் திருவிழாக் கோலத்தில் மகிழ்கிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com