இன்று இமாச்சலப் பிரதேசத்தின் 17வது முதலமைச்சராக பதவியேற்கிறார் சுக்விந்தர் சிங் சுகு. சமீபத்தில் நடந்துமுடிந்த தேர்தலில் பாஜகவை சேர்ந்த முன்னாள் முதலமைச்சர் ஜெய் ராம் தாக்கூரை 37 ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் சுக்விந்தர் சிங் சுகு வென்றார். இதையடுத்து அவர் இன்று இமாச்சலப் பிரதேச முதல்வராக பதவியேற்றுக் கொண்டார்.
சுக்விந்தர் சிங் சுகுவிற்க்கு ஆளுநர் ராஜேந்திர அர்லேகர் பதவி பிரமாணம் செய்து வைத்தார். சிம்லாவில் நடைபெற்ற இவ்விழாவில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, பிரியங்கா காந்தி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இமாச்சலபிரதேச மாநில சட்டப்பேரவைக்கு நடைபெற்ற தேர்தலில், மொத்தமுள்ள 68 இடங்களில், 40-ல் காங்கிரஸ் வெற்றிபெற்று ஆட்சியை கைப்பற்றியது. இதைத்தொடர்ந்து நடைபெற்ற காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் சட்டமன்ற காங்கிரஸ் கட்சி தலைவராக சுக்விந்தர் சிங் சுகு தேர்ந்தெடுக்கப்பட்டார்.
சுக்விந்தர் சிங் சுகு யார்? அவரை பற்றி.....
இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள நாதோன் கிராமத்தில், விவசாய குடும்பத்தில் 1964ஆம் ஆண்டு மார்ச் 27ஆம் தேதி பிறந்தவர் சுக்விந்தர் சிங் சுகு. இவரின் தந்தை ரஷில் சிங், இமாச்சலப் பிரதேச போக்குவரத்து கழகத்தில் ஓட்டுநராக பணியாற்றியவர். சுக்விந்தர் சிங் சுகு சட்டக்கல்லூரி மாணவர்.
சுக்விந்தர் சிங் சுகு, கல்லூரி பருவத்திலேயே காங்கிரஸ் கட்சியின் இந்திய தேசிய மாணவர் சங்கமான, என்எஸ்யூஐ-ல் இணைந்து பணியாற்ற தொடங்கினார். அதன்பிறகு, 1998 முதல் 2008 வரை மாநில இளைஞர் காங்கிரஸின் தலைவராக பணியாற்றி உள்ளார். தன்னுடைய தொடக்க காலத்தில் பால் விற்பனையாளராகவும் அவர் வேலை பார்த்துள்ளார்.
காங்கிரஸ் கட்சியில் படிப்படியாக வளர்ந்து வந்த சுக்விந்தர் சிங் சுகு, 2013ம் ஆண்டு இமாச்சல பிரதேச காங்கிரஸ் கமிட்டியின் தலைவராக உயர்ந்தார். 13-வது இமாச்சல பிரதேச சட்டமன்ற தேர்தலின்போது, நாதோன் தொகுதியில் இருந்து, இவர் எம் எல் ஏ வாக தேர்ந்தெடுக்கப்பட்டார். தொடர்ந்து நான்கு முறை சட்டமன்ற உறுப்பினராக சுக்விந்தர் சிங் சுகு பதவி வகித்துள்ளார்.