கோடைக்கால பட்டாசு மரணங்கள். தீயணைப்புத் துறை எச்சரிக்கை

கோடைக்கால பட்டாசு மரணங்கள். தீயணைப்புத் துறை எச்சரிக்கை
Published on

டந்த சில  ஆண்டுகளுக்கு முன்புவரை  தீபாவளி, தசரா போன்ற முக்கியப் பண்டிகைகளில் மட்டுமே பட்டாசு வெடிக்கும் பழக்கம் மக்களிடையே இருந்தது. தற்போது பட்டாசுகள் மீதான மோகம் அதிகமாகி பிறந்தநாள்விழா, கோவில் திருவிழா என அனைத்து விசேஷங்களிலும் பட்டாசு வெடித்துக்  கொண்டாடும் பழக்கம் மக்களிடையே அதிகரித்துள்ளது. அதனால் ஆண்டு முழுவதும் பட்டாசு உற்பத்தியும் தடையின்றி நடந்து வருகிறது. இதனால் ஒருபக்கம் தொழிலாளார்களுக்கு வாழ்வாதாரம் உயர்வதாக இருந்தாலும் மறுபக்கம் கூடும் விபத்துக்கள் வேதனை அளிக்கின்றன.

கோடைகாலம் துவக்கத்திலேயே பட்டாசு மரணங்களால் மனம் கனக்கும் செய்திகள் தொடர்ந்த வண்ணம் உள்ளது. கடந்த 16ஆம் தேதி தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் நாகரசம்பட்டியில் பட்டாசு குடோனில் ஏற்பட்ட தீ விபத்தில் இரண்டு பெண்கள் தீயில் கருகி உயிரிழந்தனர். நேற்று முன் தினம் காஞ்சிபுரம் மாவட்டம் மலைத்தோட்டம் என்ற இடத்தில் பட்டாசு உற்பத்தி செய்யப்படும் தொழிற்சாலையில் ஏற்பட்ட கொடிய விபத்தில் பத்து பேர் உயிரிழந்ததுடன்,  மேலும் 18 பேர் பலத்த காயங்களுடன் காஞ்சிபுரம் அரசு மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அதே நாளில் சேலம் மாவட்டம் கொங்கணாபுரம் முனியம்பட்டியில் பட்டாசு தொழிற்சாலையில் ஏற்பட்ட விபத்தில் பெண் ஒருவர் உயிரிழந்தார். இதில் பலத்த காயமடைந்த முதியவர் ஒருவர் சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இது போன்ற பட்டாசு விபத்துகள் அடிக்கடி நடந்து வரும் சூழலில் இதைத் தவிர்த்து பட்டாசு தொழிற்சாலைகளில் பணிபுரிபவர்களுக்கும் பட்டாசு ஆலைகளுக்கும் சேலம் தீயணைப்புத்துறை அதிகாரிகள் சில விதிமுறைகளைப் பின்பற்றி உயிர் சேதங்களைத் தவிர்க்குமாறு அறிவுறுத்தி உள்ளனர். அது குறித்த செய்தி இதோ;

பட்டாசு உற்பத்தியில் தமிழகம் முதன்மை மாநிலமாக உள்ளது. இங்கிருந்து தமிழகத்தில் பல பகுதிகளுக்கும் இதைத்தவிர வட மாநிலங்களுக்கும் பட்டாசுகள் விற்பனைக்கு அனுப்பப்படுகிறது. தமிழகத்தில் குறிப்பாக விருதுநகர் மாவட்டம் சிவகாசி, சாத்தூர் உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் 700 க்கும் மேற்பட்ட பட்டாசு தொழிற்சாலைகள் உள்ளன. இங்கு பட்டாசு உற்பத்தி தொழிலில் நேரடியாக இரண்டு லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் உள்ளனர். விருதுநகரை தவிர தமிழகத்தில் சேலம் தர்மபுரி, கிருஷ்ணகிரி, மதுரை உள்பட பல இடங்களிலும் பட்டாசு உற்பத்தி செய்யும் தொழிற்சாலையில் உள்ளன. இந்த நிலையில், இதில் ஏற்படும் உயிரிழப்பு மற்றும் காயமடைந்த வர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தற்போது கோடை காலம் என்பதால் பட்டாசு தொழிற் சாலைகளில் விபத்து சம்பவங்கள் நடந்து வருவது பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இது போன்ற சம்பவங்கள் நடக்காமல் இருக்க கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் குறித்து சேலம் தீயணைப்பு வீரர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

       “பட்டாசு உற்பத்திக்கு முக்கிய மூலப்பொருளில் பாஸ்பரஸ் ஒன்றாகும். இந்த தீ பற்றிக்கொள்ளும் தன்மை உடையது. இதனால் வெயிலில் சூடேறுவதற்கு முன்பு பாஸ்பரஸ் பயன்படுத்த தொடர்பான வேலைகளை முடிக்க வேண்டும். பட்டாசு தொழிற்சாலைகள் மக்கள் நடமாட்டம் இல்லாத பகுதியில் தான் இருக்க வேண்டும். உயர் அழுத்த மின்கம்பிகள் செல்லும் இடத்தில் தொழிற்சாலைகள் அமைக்க கூடாது. பட்டாசு உற்பத்திக்கு தேவைப்படும் மருந்து கலவைகளை முழுமையாக பயன்படுத்த வேண்டும். மீதமுள்ள மருந்து கலவையை பாதுகாப்பாக அகற்ற வேண்டும். ஒரு அறையில் அனுமதிக்கப்பட்ட நபர்களைக் கொண்டு மட்டுமே உற்பத்தி மேற்கொள்ள வேண்டும். மருந்து கலவையினை தயாரித்த உடனே செலுத்தும் பணி மேற்கொள்ள வேண்டும் இதன் மூலம் மருந்து கலவை நீர்த்துப் போய் விபத்து நிகழ்வது தவிர்க்கப்படும். பட்டாசு உற்பத்திக்கு ஒரு நாள் தேவைக்கு மட்டுமே ரசாயன கலவையினை பயன்பாட்டிற்கு எடுத்துக் கொள்ள வேண்டும். இரும்பிலான பொருட்களை உற்பத்தியில் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். உற்பத்தி செய்யப்பட்ட பட்டாசுகளை அதற்கென உள்ள உலர் மேடையில் மட்டுமே காய வைக்க வேண்டும். மரத்தடியில் அமர்ந்து உற்பத்தி செய்வதை தவிர்க்க வேண்டும். இரவு நேரங்களில் பட்டாசுகளை தொழிற்சாலையில் உற்பத்தி செய்யக்கூடாது.

தொழிற்சாலைக்கு தொழிலாளர்கள் செல்போன் எடுத்துச் செல்லக்கூடாது. மது அருந்திய தொழிலாளர் களை தொழிற்சாலைக்குள் அனுமதிக்க கூடாது. பருத்தி ஆடைகளை மட்டுமே தொழிலாளர்கள் அணிய வேண்டும். ஜன்னல்கள் திறந்த நிலையில் இருக்க வேண்டும். தரையில் மூன்று மில்லி மீட்டர் தடிமன் உள்ள ரப்பர் சீட் விரிக்கப்பட்டிருக்க வேண்டும். ஒரு கட்டிடத்திற்கும் மற்றொரு கட்டிடத்திற்கும் இடையே குறைந்த பட்சம் 18 மீட்டர் இடைவெளி இருக்க வேண்டும். ஒரு கட்டிடத்துக்குள் 50 கிலோ எடைக்கு மேல் வெடி மருந்து பொருட்களை பயன்படுத்தக் கூடாது. பாதுகாப்பாக மேற்கொள்ளப்பட வேண்டிய பட்டாசு உற்பத்தி தொழிலில் சிலரின் அலட்சியத்தாலும் கவனக்குறைவான நடவடிக்கையாலும் அவ்வப்போது வெடி விபத்துகள் ஏற்பட்டு உயிர்பலிகளும் ஏற்படுகின்றன. பட்டாசு தொழிற்சாலைகளில் பயன்படுத்தும் மூலப் பொருட்களான ரசாயனங்கள் தொடர்பாக முழுமையாக அறியாமல் இருத்தல், ரசாயனங்களை கையாளுவதில் உள்ள அறியாமை போன்ற காரணங்களால் விபத்துக்கள் ஏற்படுகின்றன.

     தற்போது கோடை காலம் என்பதால் வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளது. தீப்பிடிக்கும் எந்த பொருளையும் அதிக நேரம் வெயிலில் வைக்கக்கூடாது. காஞ்சிபுரம் சேலம் தர்மபுரி பட்டாசு தொழிற்சாலைகளில் ஏற்பட்ட சம்பவங்கள் கூட வெடிபொருட்கள் உராய்வினால் அல்லது நீண்ட நேரம் வெடிப்பொருட்கள் வெயிலில் வைத்த காரணத்தால் ஏற்பட்டு இருக்கலாம். இதுபோன்ற சம்பவங்கள் நடக்காமல் இருக்க பட்டாசு உற்பத்திக்கு தேவையான வெடிப்பொருட்களை நீண்ட நேரம் வெயிலில் வைக்க கூடாது.” என்றனர்.

     அதிகாரிகளின் ஆலோசனைகளைக் கடைப்பிடிப்பதன் மூலம் இனி வரும் காலங்களிலாவது முன் எச்சரிக்கை யுடன் விபத்துகள் நிகழாமல் தடுக்கலாம் என்பதே பொதுமக்களின் வேண்டுகோள்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com