
கடந்த அதிமுக ஆட்சிக் காலத்தில் 2013ம் ஆண்டு முதல் 2021ம் ஆண்டு வரை சுமார் எட்டு ஆண்டுகள் தமிழகத்தின் சுகாதாரத்துறை அமைச்சராக இருந்தவர் சி.விஜயபாஸ்கர். தற்போது இவர் புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை தொகுதி சட்டமன்ற உறுப்பினராக இருந்து வருகிறார். தமிழ்நாட்டில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டதைத் தொடர்ந்து, கடந்த 2021ம் ஆண்டு அக்டோபர் மாதம் புதுக்கோட்டை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாரால் பதியப்பட்ட வழக்கில் 56 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை நடத்தினர். இதில் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் வருமானத்தை விட அதிகமாக , 35 கோடியே 79 லட்சம் ரூபாய் அசையும் மற்றும் அசையா சொத்துக்களை இவரது பெயரிலும் இவரது மனைவி ரம்யா பெயரிலும் வாங்கி குவித்தது தெரிய வந்தது.
இதைத் தொடர்ந்து இந்த வழக்கில் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் மீதும் அவரது மனைவி ரம்யா மீதும் கடந்த மே மாதம் 22ம் தேதி புதுக்கோட்டை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் புதுக்கோட்டை நீதித்துறை நடுவர் நீதிமன்றம் ஒன்றில் 216 பக்க குற்றப்பத்திரிக்கையை தாக்கல் செய்தனர். மேலும் இந்தக் குற்றப்பத்திரிக்கையில் சென்னை தி.நகரில் 14 கோடி ரூபாய் மதிப்பில் வீடு, அசையும் சொத்துக்களான 70க்கும் மேற்பட்ட வாகனங்கள் தொழிற்சாலைகள் என 800 சொத்துக்களை வருமானத்துக்கு அதிகமாக வாங்கி குவித்துள்ளதாக லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் குற்றப்பத்திரிக்கையில் பத்தாயிரம் பக்க சொத்து ஆவணங்களை சமர்ப்பித்தனர்.
இந்த நிலையில், வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கருக்கு நீதிமன்றத்தின் மூலம் சம்மன் அனுப்பப்பட்டு இருக்கிறது. அதில் அதிமுக முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கரும் அவரது மனைவி ரம்யாவும் ஆகஸ்ட் 29ம் தேதி புதுக்கோட்டை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் ஆஜராக உத்தரவிடப்பட்டு உள்ளது.