இந்தியாவுக்கான கூகுள் 2022 என்ற நிகழ்ச்சியில் மத்திய தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவுடன் சுந்தர் பிச்சை கலந்துகொண்டார். அப்போது பேசிய அவர், இந்தியாவில் உள்ள ஸ்டார்ட்அப் நிறுவனங்களில் முதலீடு செய்வதன் ஓர் அங்கமாக 2,500 கோடி ரூபாய் நிதியத்தை அறிவித்தார்.
இதில், நான்கில் ஒரு பங்கு நிதி, பெண்கள் தலைமையிலான அல்லது பாலின வேறுபாட்டைப் போக்கும் வகையில் செயல்படும் நிறுவனங்களில் முதலீடு செய்ய உள்ளதாக அவர் கூறினார். செயற்கை புலனறிவு தொழில்நுட்பத்தில் கூடுதல் மொழிகளை சேர்த்து வருவதாகவும், ஆயிரக்கணக்கான மொழிகளை பயன்படுத்தும் வகையிலான தொழில்நுட்பத்தை உருவாக்கி வருவதாகவும் சுந்தர் பிச்சை கூறினார். மேலும், செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் சார்ந்த ஆராய்ச்சி அமைப்பதற்கு கூகுள் நிறுவனம் சார்பில் சென்னை ஐஐடிக்கு ரூ.8.26 கோடி நிதி உதவி அறிவிக்கப்பட்டது.
மேலும் ஜி20 நாடுகளின் தலைமை பொறுப்பை ஏற்றதற்கு தனது முழு ஆதரவை பிரதமர் மோடியிடம் தெரிவித்ததாகவும், வருங்காலத்தில் இந்தியாவுடன் தொழில்நுட்ப ரீதியிலான நல்லுறவை எதிர்நோக்குவதாகவும் சுந்தர் பிச்சை தெரிவித்துள்ளார்.
டெல்லியில் பிரதமர் மோடியை, கூகுள் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சை சந்தித்திப் பேசினார். பிரதமர் மோடி தலைமையில் இந்தியாவின் தகவல் தொழில்நுட்பம் சிறந்த முறையில் வளர்ச்சி பெறுகிறது என கூகுள் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சை பாராட்டு தெரிவித்துள்ளார்.அவரது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், அவர் வெளியிட்ட பதிவில், பிரதமர் நரேந்திர மோடி உடனான சந்திப்பு மிகச் சிறந்ததாக இருந்தது குறிப்பிட்டுள்ளார்.