

'வெற்றி பெறும் நேரத்தில் மட்டுமல்ல இக்கட்டான சூழலிலும் திமுக தலைவருக்கு உறுதுணையாக இருப்பேன்' என ரஜினிகாந்த் தெரிவித்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
நடந்து முடிந்த தமிழக சட்டமன்ற தேர்தல் யாரும் எதிர்பாராத ஒரு திருப்பத்தை தமிழக அரசியலில் தந்துள்ளது எனலாம். அரை நூற்றாண்டுக்கும் மேலாக தமிழக ஆட்சியை கைவசம் வைத்திருந்த திராவிட கட்சிகளை விட மக்களின் ஏகோபித்த ஆதரவைப் பெற்று அதிக இடங்களுடன் தற்போது ஆட்சியை கைப்பற்றியுள்ளது நடிகர் விஜயின் தமிழக வெற்றிக்கழகம்.
அதிரடியான பல திருப்பங்களும் ஆச்சரியங்களும் அடங்கிய தேர்தலாக இந்த 2026ம் ஆண்டுகளில் தேர்தல் இருந்தது என்றால் மிகையல்ல .ஆட்சி அமைக்க இன்னும் 10 இடங்கள் தேவை என்ற நிலையில் விஜய் மற்ற கட்சியினரின் ஆதரவை கோர,திமுகவில் இதுவரை கூட்டணியில் இருந்த கட்சியான காங்கிரஸ் தவெகவிற்கு ஆதரவு தர,அதிமுகவில் இருந்தும் சிலர் விஜய்க்கு ஆதரவு குரல்கள் என பல்வேறு விதங்களில் அரசியல் விளையாட்டுகள் நடந்தேறி வருகின்றன.
தமிழ்நாடு அரசியல் களத்தில் திரையுலக பிரபலங்கள் வெற்றி பெற்று முதல்வராக ஆட்சியில் அமர்வது விஜய் மூலம் இன்னும் மேம்படுத்தப்பட்ட உண்மையாக மாறி இருக்கிறது.முன்னதாக திரைத்துறை உலகில் இருந்து வந்த கலைஞர்,எம்ஜிஆர் ,ஜெயலலிதா வரிசையில் தற்போது விஜயும் தமிழ்நாட்டை ஆள தயாராகிறார் என்பது குறிப்பிடத்தக்கது .
விஜய் இன்றைய தலைமுறையின் நேரிடை சாட்சி என்றால் இவருக்கு முந்தைய தலைமுறை அதிகம் நேசித்த இன்னும் நேசித்துக் கொண்டிருக்கும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களது அரசியல் நிலைப்பாடு என்பது சற்றே வினோதமானது தான். மக்கள் அனைவரும் ரஜினிகாந்த் அரசியலுக்கு வரவேண்டும் என கோரிக்கை வைக்க அவரோ அரசியலைத் துறந்து ஆன்மீகத்தை தேர்ந்தெடுத்து விட்டார்.
அரசியலைப் பொறுத்தவரை அவரது அரசியல் நிலைப்பாடு குரல் தருவது,ஆதரவு தருவது, அறிக்கை விடுவது ஆகியவற்றுடன் நிறைவு பெற்று விடுகிறது. துவக்கத்தில் ரஜினிகாந்த் அரசியலில் நுழைய இருந்து திடீரென அந்த முடிவை கைவிட்ட நிலையில், அவர் திமுக கூட்டணியை ஆதரித்துப் பேசினார். 1998 இந்தியப் பொதுத் தேர்தலின்போதும் அவர் திமுகவுக்கு இதே ஆதரவை அளித்தார். ரஜினிகாந்த் 2017-ல் மீண்டும் அரசியலில் நுழையத் தயாராக இருந்தார், விரைவில் வருவேன் என ரசிகர்களுக்கு நம்பிக்கை தந்து வந்த நிலையில் தனது உடல்நிலை காரணமாக அரசியலில் நுழையும் எண்ணத்தை 2021ல் முழுமையாக கைவிட்டார் எனலாம்.
தற்போதைய தேர்தலில் பெரும்பாலும் அரசியல் பற்றிய கேள்விகளை நாசூக்காக தவிர்த்த ரஜினிகாந்த் சக நடிகர் விஜய்யின் வெற்றியைத் தொடர்ந்து அவருக்கு வாழ்த்து தெரிவித்து ஒரு பதிவைப் பகிர்ந்தார்.
தற்போது தேர்தலில் தனது சொந்தத் தொகுதியிலேயே தோல்வியைத் தழுவிய முன்னாள் முதல்வர் ஸ்டாலினுக்கு பலரும் ஆறுதல் கூறிவரும் நிலையில், ரஜினிகாந்த் சென்னை ஆழ்வார்பேட்டை இல்லத்தில் மு.க.ஸ்டாலினை சந்தித்து ஆறுதல் தரும் விதமாக பேசியது அனைவரையும் கவர்ந்துள்ளது.இக்கட்டான நேரத்திலும் உங்களுடன் இருப்பேன் எனக் கூறினார். உங்கள் மக்கள் பணி எப்போதும் போல் தொடரட்டும் என்றும் நடிகர் ரஜினி வாழ்த்தியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ரஜினிகாந்திற்கு திராவிட அரசியலில் உள்ள ஆர்வத்தையும், பல ஆண்டுகளாக அவர் கட்சிக்கு அளித்து வரும் ஆதரவையும் காணும் போது ரஜினிகாந்த் மற்றும் ஸ்டாலின் சந்திப்பு ஒரு முக்கியமான நேரத்தில் அமைந்துள்ளதாக திமுக தொண்டர்கள் கருதுகின்றனர். மேலும் இருவரும் அமர்ந்து பேசும் புகைப்படம் இணையதளத்தில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. ரஜினிகாந்த் அளித்த ஆதரவு எதிர்க்கட்சி அந்தஸ்தில் இனி செயல்படத் போகும் திமுகவுக்கு கிடைத்த எனர்ஜி பூஸ்ட் எனலாம்.