திமுக எம்.பி கனிமொழியின் வெற்றி செல்லும் - உச்ச நீதிமன்றம்!

உச்ச நீதிமன்றம்
உச்ச நீதிமன்றம்
Published on

மக்களவை தேர்தலில் திமுக எம்.பி. கனிமொழியின் வெற்றியை ரத்து செய்யக்கோரி தொடர்ந்த வழக்கை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. இந்த வழக்கின் தீர்ப்பு இன்று வெளியாகியுள்ளது.

கடந்த 2019-ம் ஆண்டு நடந்த நாடாளுமன்ற தேர்தலில் தூத்துக்குடி தொகுதியில் போட்டியிட்ட கனிமொழி சுமார் 3.50 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். அவரது வெற்றியை எதிர்த்து அந்த தொகுதி வாக்காளரான சந்தானகுமார் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

அதில், நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்ட கனிமொழி, தனது வேட்பு மனுவில், அவரது கணவர் அரவிந்தனின் பான் கார்டு எண்ணை குறிப்பிடவில்லை என தெரிவித்திருந்தார்.

இந்த வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் விசாரித்து வந்த நிலையில், அதை தள்ளுபடி செய்யக்கோரி கனிமொழி தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.

கனிமொழி
கனிமொழி

ஆனால், கனிமொழியின் கோரிக்கையை சென்னை உயர்நீதிமன்றம் நிராகரித்த நிலையில், உச்சநீதிமன்றத்தில் இந்த வழக்கை தள்ளுபடி செய்யக்கோரி கனிமொழி தரப்பில் கடந்த 2019-ம் ஆண்டு நவம்பர் 28-ம் தேதி மேல்முறையீடு செய்யப்பட்டது.

வழக்கை விசாரித்த நீதிபதிகள் அஜய் ரஸ்தோகி, பேலா எம்.திரிவேதி ஆகியோர் அடங்கிய அமர்வு சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பு வரும் வரை இடைக்கால தடை விதித்திருந்தது.

இந்நிலையில், இந்த வழக்கு கடந்த ஏப்ரல் மாதம் 27ம் தேதி விசாரணைக்கு வந்த போது, கனிமொழி தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் பி.வில்சன் உண்மை தன்மை இல்லாமல் இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. நிரந்தர கணக்குஎண் என்பது இந்தியாவில் தான் உள்ளதே தவிர சிங்கப்பூரில் அல்ல என வாதிட்டார். இதனை தொடர்ந்து எதிர்மனுதாரர் தரப்பிலும் வாதங்கள் முன்வைக்கப்பட்ட நிலையில், மீண்டும் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது.

தற்போது வந்த தீர்ப்பில் தூத்துக்குடி தொகுதியில் திமுக எம்.பி. கனிமொழியின் வெற்றியை எதிர்த்து சந்தானகுமார் தொடர்ந்த வழக்கை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது மட்டுமின்றி, திமுக எம்.பி கனிமொழியின் வெற்றி செல்லும் எனவும் நீதிபதிகள் தீர்ப்பு வழங்கியுள்ளனர்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com