ஆந்திராவுக்கு 3 தலைநகர் அமைப்பது தொடர்பான வழக்கு விசாரணையிலிருந்து ஆந்திராவுக்கு தலைமை நீதிபதி யு.யு.லலித் விலகியுள்ளார்.
கடந்த 2014-ம் ஆண்டு ஆந்திராவிலிருந்து பிரிந்து தெலங்கானா மாநிலம் உருவானது. இந்நிலையில் ஆந்திராவுக்கு புதிய தலைநகரை உருவாக்க அப்போதைய முதல்வர் சந்திரபாபு நாயுடு முயற்சித்தார். ஆனால் அடுத்த தேர்தலில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் ஆட்சியை கைப்பற்றி, ஜெகன்மோகன் ரெட்டி முதல்வராகத் தேர்வானார்.
இதனையடுத்து ஆந்திராவுக்கு நீதிமன்ற தலைநகராக கர்னூல், ஆட்சி தலைநகராக விசாகப்பட்டினம், மற்றும் சட்டசபை தலைநகராக அமராவதி என 3 தலைநகர்கள் அறிவிக்கப்பட்டது.
ஆனால் இந்த திட்டத்தை எதிர்த்து தலைநகர் அமைய நிலம் கொடுத்த விவசாயிகள் வழக்கு தொடித்தனர். அதையடுத்து ஆந்திராவில் 3 தலைநகர்கள் அமைய ஹைதராபாத் உயர்நீதிமன்றம் தடைவிதித்தது. மேலும் அமராவதியில் ஒரேயொரு தலைநகரை அமைக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டது.
இதனையடுத்து ஹைதராபாத் உயர்நீதிமன்றம் உத்தரவுக்கு எதிராக மாநில அரசு கடந்த செப்டம்பர் 17-ம் தேதி உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது.
இந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் தலைமை நீதிபதி யு.யு.லலித் மற்றும் நீதிபதி திரிவேதி ஆகியோர் அடங்கிய அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கு விசாரணையிலிருந்து விலகிக்கொள்வதாக லலித் அறிவித்துள்ளார்.
அதாவது, இந்த வழக்கில் மாநில அரசுக்கு எதிராக அமராவதி விவசாயிகள் சார்பில் ஆஜராகியிருந்த மூத்த வழக்கறிஞர், நீதிமன்றத்தின் கவனத்திற்கு ஒரு விஷயத்தை கொண்டு வந்தார். அதாவது, தலைமை நீதிபதி யு.யு.லலித் 2014-ம் ஆண்டில் உச்சநீதிமன்றத்தின் வழக்கறிஞராக இருந்தபோது ஆந்திராவின் 3 தலைநகர் திட்டத்திற்கு ஜெகன் மோகன் ரெட்டிக்கு சட்ட ஆலோசனை வழங்கியுள்ளார்.
இதை சுட்டிக் காட்டியதும், மேற்கொண்டு இந்த வழக்கு விசாரணையிலிருந்து விலகிக்கொள்வதாக தலைமை நீதிபதி லலித் அறிவித்துள்ளார். அதேபோல வழக்கு விசாரணையை மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு மாற்றுவதாகவும் அதுவரை விசாரணை ஒத்தி வைக்கப் படுவதாகவும் தலைமை நீதிபதி யு.யு.லலித் அறிவித்தார்.