மெரினா கடலில் பேனா நினைவுச் சின்னம் அமைப்பதற்கு எதிரான வழக்கை தள்ளுபடி செய்தது உச்ச நீதிமன்றம்!

மெரினா கடலில் பேனா நினைவுச் சின்னம் அமைப்பதற்கு எதிரான வழக்கை தள்ளுபடி செய்தது உச்ச நீதிமன்றம்!

மிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் மறைந்த கருணாநிதியின் நினைவாக, சென்னை மெரினா கடலில் 81 கோடி ரூபாய் செலவில் பேனா நினைவுச் சின்னம் அமைக்க தமிழக அரசு முடிவு செய்து, அதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. முன்னதாக, இதுகுறித்து அரசியல் கட்சிகளின் கருத்துக் கேட்புக் கூட்டத்தில் இதற்கு ஆதரவாகவும் எதிராகவும் பல்வேறு கருத்துக்கள் வைக்கப்பட்டன.

இந்த நிலையில், ‘கடல் வளத்தைப் பாதுகாக்க வேண்டும். கடற்கரையோரங்களில் கட்டுமானங்களை மேற்கொள்ள தடை விதிக்க வேண்டும். அந்த வகையில், சென்னை மெரினா கடலில் பேனா நினைவுச் சின்னம் வைப்பதற்கு தடை விதிக்க வேண்டும்’ எனக் கோரி மதுரையை சேர்ந்த சமூக ஆர்வலர் கே.கே.ரமேஷ் என்பவர் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் ஒன்றைச் செய்திருந்தார்.

அந்த மனுவில், ‘மெரினா கடலில் 134 அடி உயரத்துக்கு பேனா நினைவுச் சின்னம் அமைப்பது என்பது கடலோர ஒழுங்கு முறை மண்டல விதிகளை மீறும் நடவடிக்கை ஆகும். அதேபோல், காலநிலை மாற்றத்தால் அதிக மழைபொழிவு ஏற்படுவது வாடிக்கையாகியுள்ளது. இந்தக் காலகட்டத்தில் இவ்வாறான தேவையில்லாத, முக்கியத்துவமற்ற கட்டுமான திட்டங்களால் கடலில் பல்வேறு மாற்றங்கள் நிகழும். எனவே, பேனா நினைவுச் சின்னம் அமைக்கும் தமிழ்நாடு அரசின் திட்டத்துக்குத் தடை விதிக்க வேண்டும்.

மேலும், இந்தியா முழுவதும் 6,632 கிலோ மீட்டர் தொலைவுக்கு கடற்கரை உள்ளது. இதில் 33.6 சதவிகிதம் அளவுக்கு கடல் அரிப்பால் பாதிப்படைந்துள்ளன. எனவே, நாடு முழுவதும் கடற்கரை அருகே கட்டுமானத்துக்கு தடை விதிப்பதோடு, கடல் அரிப்பை தடுக்கும் விதமாக கடற்கரை ஓரங்களில் அதிக அளவிலான மரங்களை நடுவதற்கு தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா, கேரளா, ஒடிசா உள்ளிட்ட கடலோர மாநில அரசுகளுக்கு உத்தரவிட வேண்டும்’ என்று அந்த மனுவில் கோரிக்கை வைக்கப்பட்டு இருந்தது.

இந்தக் கோரிக்கை மனு மீதான விசாரணை இன்று உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியின் முன்பு விசாரணைக்கு வந்தது. இந்த மனு குறித்து விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதி, ‘பொதுநலனைக் கருத்தில் கொண்டு இந்த வழக்கு தாக்கல் செய்யப்படவில்லை. இது எந்த மாதிரியான மனு என்றும் தெரியவில்லை’ என அதிருப்தி தெரிவித்ததோடு, இந்த மனுவையும் தள்ளுபடி செய்து உத்தவிட்டார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com