

கரூரில் தவெக கட்சிக் கூட்டத்தில் நிகழ்ந்த துயர சம்பவம் தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் திமுக தொடர்ந்த வழக்கு மீதான விசாரணை இன்று உச்சநீதிமன்றத்தில் நடைபெற்றது.
சட்டமன்றத் தேர்தலுக்காக கரூரில் 2025 ல் செப்டம்பர் 27 அன்று நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகத்தின் அரசியல் பரப்புரைக் கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசல் காரணமாக 41 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர் . மேலும் நூற்றுக்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.இந்த சம்பவம் தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தின் கண்காணிப்பில் சிபிஐ விசாரணைக்கு மாற்றப்பட்டு நிலுவையில் உள்ளது.
இதற்கிடையே, சமீபத்திய தேர்தலில் வெற்றி பெற்று தமிழக முதல்வராகப் பொறுப்பேற்றுள்ள சி. ஜோசப் விஜய், வரும் ஜூலை 10ஆம் தேதி கரூர் சென்று, உயிரிழந்தவர்களின் குடும்பங்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறவும், கருணை அடிப்படையிலான அரசுப் பணி உள்ளிட்ட நிவாரணங்களை வழங்கவும் திட்டமிட்டிருந்தார்.இச்சம்பவம் குறித்து போடப்பட்ட வழக்கில் தற்போது நடைபெற்று வரும் சி.பி.ஐ (CBI) விசாரணையில் தவெக தலைவர் மற்றும் நிர்வாகிகள் உள்ளிட்டோர் ஆஜரானது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் கரூர் துயர சம்பவத்தில் சம்பந்தப்பட்டவர்களுக்கு நிவாரணங்களை வழங்குவது போன்ற பல்வேறு விஷயங்களை செய்கிறார்கள் என்றும் முதலமைச்சர் விஜய் கரூர் சென்று பாதிக்கப்பட்டவர்களை சந்திக்க தடை கோரியும் கரூர் சம்பவத்தில் தொடர்புடையவர்கள் ஊடகங்களில் பேசுவதை கட்டுப்படுத்த வேண்டும் என்றும் திமுக சார்பில் தொடர்ந்த வழக்கின் தீவிரத் தன்மையை கருத்தில் கொண்டு மனுவை அவசரமாக விசாரணைக்கு எடுத்துக்கொள்ள உச்சநீதிமன்றம் ஒப்புதல் அளித்துள்ளதாக நேற்று செய்திகள் தெரிவித்தன .
மேலும் கரூரில் போலீசாரை வைத்து பொதுமக்களை போலீசார் கொன்று குவித்ததாக பேசிய ஆதவ் அர்ஜுனா மீது வழக்குப் பதிய கோரியும் திமுக மனு அளித்தது. இச்சம்பவம் குறித்து பொதுவெளியில் பேசுவது மற்றும் சாட்சிகளை திசைதிருப்ப வாய்ப்புள்ளதாக கூறி, கரூர் சம்பவம் தொடர்பாக முதலமைச்சர் விஜய் அமைச்சர்கள் ஆதவ், நிர்மவ் குமார் புஸ்ஸி ஆனந்த் ஆகியோர் பேச தடை விதிக்கவும் திமுக மனு அளித்திருந்தது .
அதன் படி முதலமைச்சர் விஜய் கரூர் சென்று கூட்டத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தை சந்திக்க தடை கோரி உச்ச நீதிமன்றத்தில் திமுக கட்சியின் அமைப்புச் செயலாளர் ஆர் எஸ் பாரதி தொடர்ந்த வழக்கின் விசாரணை உச்ச நீதிமன்றத்தில் துவங்கியது . வழக்கு விசாரணை இன்று நடைபெற்ற நிலையில் இரு தரப்பு வாதங்களையும் கேட்டு நீதிபதிகள் திமுகவின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டதுடன் 'நீதிமன்றத்தை அரசியல் களமாக மாற்றுகிறீர்கள்' என்றும் கண்டனம் தெரிவித்துள்ளதும் திமுக மனுவை வாபஸ் பெற்றுக்கொண்டதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
"முதலமைச்சரின் பேச்சையும் செய்திகளையும் உச்ச நீதிமன்றம் தான் கட்டுப்படுத்த வேண்டுமா ? பேச்சுரிமைக்கு தடை விதிக்க கோருகிறீர்களா? அரசியல் எதிரிகளின் கருத்துக்களுக்கு நீதிமன்றம் இப்படி உத்தரவு பிறப்பிக்க முடியும் ?முதலமைச்சர்க்கு நிர்வாக ரீதியில் உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என எதிர்பார்க்கிறீர்களா? உச்ச நீதிமன்றத்தை அரசியல் மேடையாக மாற்றாதீர்கள். " என நீதிபதிகள் கண்டனத்தை தெரிவித்துள்ளனர்.
மேலும் "பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு அரசு சார்பில் கருணை அடிப்படையில் வழங்குவது எப்படி வழக்கை பாதிக்கும்? முதலமைச்சர் விஜய் கரூர் செல்ல தடை கோரிய மனுவை விசாரணைக்கு ஏற்க முடியாது" என உச்சநீதிமன்ற கண்டனத்தை தொடர்ந்து மனுவை திரும்ப பெற்றார் திமுக வழக்கறிஞர் . இதனால் திமுக தரப்பு வழக்கறிஞர், மனுவை வேறு சட்ட வழிமுறைகள் மூலம் அணுக அனுமதி பெற்று, அதைத் திரும்பப் பெற்றுக்கொள்வதாகத் தெரிவித்தார். இதனை ஏற்றுக்கொண்ட உச்ச நீதிமன்றம், திமுகவின் மனுவை "திரும்பப் பெறப்பட்டதாகக் கூறி" தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
நீதிபதிகளின் சரமாரி கேள்விகள்!
விசாரணையின் போது நீதிபதிகள் திமுக தரப்பினரை சரமாரியாகக் கேள்விகளைக் கேட்டு விளாசினர்.
"உச்சநீதிமன்றத்தை ஒரு அரசியல் மேடையாக மாற்ற வேண்டாம். திமுகவின் இந்த மனு முழுவதும் அரசியல் உள்நோக்கம் கொண்டதாகவே நீதிமன்றம் கருதுகிறது; எனவே இதை ஏற்க முடியாது" என நீதிபதிகள் திட்டவட்டமாகத் தெரிவித்தனர்.
முதல்வர் விஜய் இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர் என திமுக தரப்பு வாதிட்டதை நீதிமன்றம் ஏற்க மறுத்தது. "குற்றப்பத்திரிகையில் அவர் பெயர் எங்கும் இடம்பெறாத நிலையில், அவரை எப்படி குற்றம் சாட்டப்பட்டவர் என நீங்கள் கூற முடியும்?" என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
"கருத்து சுதந்திரத்திற்கு எதிராக நீதிமன்றம் தடை விதிக்க வேண்டும் என நீங்கள் கோருகிறீர்களா?" எனவும் நீதிபதி விஸ்வநாதன் திமுக தரப்பைப் பார்த்துக் காட்டமாகக் கேட்டார்.
நீங்களே பண்றீங்களா? இல்ல நாங்க பண்ணட்டுமா?
இறுதியாக, "இந்த மனுவை நீங்களாகவே திரும்பப் பெற்றுக் கொள்கிறீர்களா? அல்லது நாங்களே தள்ளுபடி செய்யட்டுமா?" என நீதிபதிகள் எச்சரித்ததைத் தொடர்ந்து, வேறு வழியின்றி திமுக தரப்பு தனது மனுவை வாபஸ் பெற ஒப்புக்கொண்டது. இதனையடுத்து, திமுகவின் மனுவை உச்சநீதிமன்றம் அதிகாரப்பூர்வமாகத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
இந்த அதிரடித் தீர்ப்பின் மூலம், திட்டமிட்டபடி முதல்வர் விஜய் ஜூலை 10ஆம் தேதி கரூர் சென்று பாதிக்கப்பட்ட மக்களைச் சந்திப்பதில் இருந்த முட்டுக்கட்டை முழுமையாக நீங்கியுள்ளது.